நான் யாழில் பிறந்திருந்தாலும் , வளர்ந்தது என்னவோ கொழும்பில் தான்.அதனால் எல்லா பள்ளி விடுமுறைகளுக்கு தவறாமல் ஊருக்கு அதாவது யாழ்ப்பாணத்துக்கு போய் விடுவோம். அதுவும் ரயிலில் தான் போவோம் யாழ்தேவி , உத்தரதேவி போன்ற ரயில்களில். அப்போது அறியாத பருவம், எம்மை தாண்டி ஓடும் மரங்களை எண்ணிக்கொண்டு இருப்பேன். பனை மரங்கள் வரத் தொடங்கியது யாழ்ப்பாணத்தை நெருங்கி விட்டோம் என்று நினைத்து அம்மா அப்பாவிடம் ஊருக்கு கிட்டே வந்து விட்டோம் தானே என்று கேட்டேன்.அப்பா அடுத்தது எந்த எந்த ரயில் நிலையங்கள் என்று சொன்னதும் எண்ணிக் கொண்டு இருப்பேன் யாழ்ப்பாணம் வரும் வரை . பனை மரங்கள் என்றால் யாழ்ப்பாணம் என்று தான் மனதில் பதிந்து இருந்தது.
ஆனால் வளர்ந்து குறிப்பாக, அந்த பெரிய கலவரத்தின் பின் பல தடவை யாழ்-கொழும்பு போய் வந்து இருக்கிறேன். முன்னர் போன மனநிலைக்கும் பின்னர் போன மனநிலைக்கும் பாரிய வித்தியாசம். ஆனால் மனதில் வேறு மாதிரியான ஒரு பயத்துடன் தான். குறிப்பாக அனுராதபுரம் புகையிரத நிலையம் என்றால் எனக்கு அப்படி ஒரு பயம் என்னுள்ளேயே. அதை நான் வெளி காட்டிக் கொண்டது இல்லை .அந்த ரயில் நிலையத்தில் தான் ஒரு கலவரத்தின் போது பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அந்த ரயில் நிலையத்தை கடக்கும் வரை யன்னலால் வெளியே பார்த்தவாறு இருப்பேன். யாரும் ஓடி வந்து ஏறி ரகளை பண்ணுவார்கள் என்று இனம்புரியாத பயம் ஒன்று. அப்படி யாரும் வரவில்லை என்ற பின் தான் மனது ஆறுதல் படும்.
அன்று அந்த வன்முறையில் இறந்து போனவர்கள் இருந்து இருந்தால் இன்று என்னவாக எப்படி இருப்பார்கள். அவர்கள் என்ன நினைப்பார்கள். அங்கே தப்பி ஊரில் நடந்த பிரச்சனையில் சிக்கி இருப்பார்களா ? அவர்களின் குடும்பத்தவர்களுக்கு அந்த பிரிவு எவ்வளவு வலியை கொடுத்து இருக்கும்.
அன்று இந்த சம்பவத்தின் போது பலர் இறந்து போக காரணமாக இருந்தவர்கள் இன்று அந்த ரயிலை காணும் போது அவர்களுக்கு என்ன தோன்றும். தாங்கள் கொன்று விட்ட உயிர்கள் பாவம் என்று நினைக்கிறார்களா இல்லை அந்த எண்ணமே வராமல் மறந்து போய் இருப்பார்களா ? தாங்கள் செய்த பாவத்திற்கு தண்டனை கிடைக்கும் என்று சிந்திப்பார்களா ? இல்லை இன்னும் கொடூரமான மிருகமாக மாறி இருப்பார்களா ?
இப்படி ஏகப்பட்ட கேள்விகள் விடை இல்லாமல் .அதே ரயில் நிலையம் சில மாற்றங்கள்,சுவருக்கு வண்ணம் பூசப்பட்டு இருந்தன, மரங்கள் வளர்ந்து முதிர்ச்சி அடைந்து இருந்தது. சில புதிய மரங்கள் ஆங்காங்கே நட்டு வளர்க்க படுகின்றன. அதே மண் , அதே கற்கள் அவற்றில் எந்த ஒரு புது மாற்றமும் இல்லை.
ஒரு மனிதனின் பார்வை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை இருக்க முடியாது, காட்சிகள் மாறும். கட்டங்கள் மாறும், எண்ணங்கள் மாறும் நானும் மாறுவேன்.
May be an image of 10 people, train, railroad and text

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்