கனகு ஐயா
பலாலி வீதியையும், பருத்தித்துறை வீதியை நடுவில் இணைக்கும் பாலம் தான் அம்மன் வீதி . அது அம்மன் வீதி என்பதாலோ என்னவோ அந்த வீதியில் உள்ள எல்லா வீட்டிலும், வீட்டுக்கு இரண்டுக்கு என்று குறையாமல் கன்னிப் பெண்கள் இருப்பார்கள். அநேகமான வீடுகளில் பெண்களே அதிகம். வீட்டுக்கு வீடு பெண்கள். அதிலும் எல்லா பெண்களும் எதோ ஒரு விதத்தில் அழகிகள் தான். அம்மன் வீதியின் முடிவில் பருத்தித்துறை வீதியோடு ஒட்டி இருக்கும் வீரமாகாளி அம்மன் கோவில், அந்த கோயில் தான் எல்லா பெண்களின் ஆஸ்தான கோயில்.
ஊரில் ஒரு வாடிக்கை இரவில் எல்லோர் வீடுகளிலும் இரவு உணவு பலகாரம் தான், பலகாரம் என்றால் முறுக்கு, வடை, சீடை என்று நினைக்க கூடாது. அதிகம் அரிசி மாவை இடித்து செய்யப்படும், புட்டு, இடியப்பம், மற்றும் உளுந்தால் செய்யப்படும் தோசை, இட்லி என்பன.
இந்த அரசி மா, அரிசியை ஊற வைச்சு ஒரு இரவு, அடுத்தநாள் இடித்து வைத்து கொள்ளவார்கள் ஒரே அடியாக. பின்னர் தான் பலகாரம் செய்வார்கள். இந்த அரிசிமாவை அநேகமாக யாரவது பெண்கள் வந்து சம்பளத்துக்கு இடித்து தருவார்கள். இதுதான் வழமை , பொதுவாக பெண்கள் தான் இந்த தொழிலை செய்து வந்தார்கள். நாங்கள் அறிய முதன் முறையாக ஒரு ஆண் வந்து சேர்ந்தார், அந்த மாவிடிக்கும் வேலைக்கு . வயது 65, மாநிறம். ஆங்காங்கே கருத்த முடிகள் நரை முடிகள் இடையே. திடகாத்திரமான உருவம். பெண்களிடம் இருக்கும் சௌகரியம் , பழக்கம், ஆணிடம் இருக்கவில்லை, பலருக்கு, அதனால் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனாலும் அந்த வயோதிபர் மனம் தளராமல் தினமும் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினார், மாவிடித்து தரவா என்று கேட்டு, நம்பிக்கை உடன், அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. யாரும் லேசில் அவரை மாவிடிக்க சேர்த்துக்கொள்ளவில்லை . அம்மா தான் பாவம் ஒருமுறை கொடுத்து பார்ப்போம் என்று, “ சரி ஐயா நாளைக்கு காலை மறக்காமல் வாங்கோ “ சொல்லி விட்டா . அவரும் சரி போய் விட்டார். அம்மாவும் அரிசியை ஊற போட்டா அடுத்தநாள் இடிப்பதற்காக.
அடுத்த நாள் காலை குறித்த நேரத்துக்கு முன்பாகவே வந்து, கடகடவென உலக்கையை கழுவி, சுத்தம் செய்து தன வேலையை கனகச்சிதமாக ஆரம்பித்து விட்டார். ஒருவர் எட்டு மணித்தியாலத்தில் செய்யும் வேலையை, வேகமாக 4 மணி நேரத்தில் முடித்து விட்டு பணத்தை பெற்றுக்கொண்டு போய் விட்டார். அன்றிலிருந்து அந்த கனகு ஐயா எங்கள் வீட்டுக்கு மட்டுமில்லை அயலட்டை எல்லோரையும் வாடிக்கையாராக பிடித்துக்கொண்டார்.
எந்த தேவையற்ற பேசும் இல்லை. வந்தோமா, வேலை செய்தோமா என்பதோடு சரி, இடையில் தேனீர் , குடிப்பார், சாப்பிட மாட்டார்.
1990 களில் நாட்டு பிரச்சனையில் ஊரே அல்லகல்லலோல பட்டது. ஆனால் கனகு ஐயா , தனது வாடிக்கையாளர்கள் மாவிடிக்க கேட்டால் , மறுக்காமல் கடமையை செய்தார். ஒரு பொம்மர், சகடை போன்ற விமானங்கள் வந்து குண்டு போட்டு விட்டு போனால், மக்கள் எல்லாம் ஈசல் போல் பறந்து கொண்டு இருந்தார்கள். எல்லோரும் இருப்பிடங்களை விட்டு காணாமல் போனார்கள். நாங்களும் தான் இருந்த வீட்டை விட்டு இடம் பெயர்ந்தோம்.
நாங்கள் சீரணி பக்கம் போய் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இருந்தோம். சில மாதங்களில் யுத்தம் தற்காலிகமாக ஓய்ந்தது.மெதுவாக வீட்டு பக்கம் நாங்களும் எட்டி பார்க்கலாம் என்று வீட்டுக்கு அம்மா, அண்ணா, நானும் வந்தால், எங்கள் வீட்டு விறாந்தையில் கனகு ஐயா, முதலில் அது அவர் தான் என்று தெரியவில்லை, யாரோ என்று தான் நினைக்க தோன்றியது. கொஞ்சம் கிட்ட போய் பார்க்க அடையாளம் தெரிந்தது. உண்மையில் சொன்னால் மரண படுக்கையில் அவரை, ஈக்கள் மொய்க்க எலும்பும் தோலுமாக செத்துக்கொண்டு இருந்தார். அவரை பார்த்ததும் நான் பயத்தில் கத்தி விட்டேன்.
அப்படி ஒரு பரிதாபத்துக்குரிய கோலம். முதலில் என்ன செய்வது என்று தெரியவில்லை, எங்கே தொடங்குவது என்று புரியவில்லை.
நானும் அண்ணனும் சேர்ந்து, பசியில் கண்கள் அடைக்க, படுக்கையில் கிடைத்தவரை முதலில் எதாவது குடிக்க கொடுப்போம் என்று, அவசரமாக அங்கர் பாலை கரைத்து ஆற்றி இதமான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பருக்க , அவர் மிக கஷ்டப்பட்டு வாயை திறந்தார்.
அதன் பின் அந்த இடத்தை டெட்டால் போட்டு கழுவி துடைத்து அவரை அப்புற படுத்தி இடம் மாற்றி ஒரு மாதிரி துப்பரவு செய்து விட்டோம். இரண்டு வாரங்களில் அவர் எழுந்து மெதுவாக நடமாட தொடங்கி விட்டார் ஆச்சரிய படும்விதமாக. மெதுவாக அவர் வழமைக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
நான் சீயாகையை கழுவி காய வைத்துவிட்டு உள்ளே அலுவலாக போய் விட்டு வர , வெளியில் சீயாக்கையை காணவில்லை. நானும் ஓடி திரிஞ்சு தேடினேன். எங்கே போச்சுது இந்த சீயாக்காய் கால் முளைச்சு என்று. எப்படி காணாமல் போகும், மில்லியன் டாலர் கேள்வியாக, அட்டகாசம் பண்ணிக்கொண்டு இருந்தேன்.பக்கத்து வீட்டு பெண் வந்து சொன்னாள் ,கனகு ஐயா நல்லூர் பின் வீதியில் சீயாக்கையை காய வைத்து விட்டு , சற்று தள்ளி படுத்து இருந்து காவல் காத்துகொண்டு இருக்கிறார் என்று. மாலை சீயாக்கையை மில்லுக்கு கொடுத்து பவுடராக கையில் பையோடு வந்தார் கனகு ஐயா.
யார் வேலை செய்ய கேட்டாலும் , உடனே ஓம் சொல்ல மாட்டார், பிள்ளைக்கு வேலை ஏதும் இல்லை என்றால் செய்து தருகிறேன் என்பார். அவர் என்னை பிள்ளையாக நினைத்து கொண்டார்.
அவர் எனக்கு யாரும் இல்லை தான், நானும் அவருக்கு யாருமில்லை தான். ஆனால் யாருமில்லாதவர்க்ளுக்கு எல்லாம் யாரையோ உறவுகளாக்கி வைப்பது தான் மனித நேயம்.
கருத்துகள்
கருத்துரையிடுக