இப்படியும் மனிதர்கள்
நாங்கள் நல்லவர்கள் , நல்ல மாதிரி என்று காட்டிக்கொள்ளவே மனிதர்களுக்கு பிடிக்கும், அதுவே யதார்த்தமாக கொள்ள படுகிறது.
நான் ஆஸ்திரேலியா சென்ற போது, என் அக்காவை பார்க்க Sevem hill station, வரை சென்று, அதில் இருந்து சிறிது தூரத்தில் தான் அக்கா வீடு. என் பிரியமான பாசமான அக்காவை பார்த்து விட்டு திரும்பி ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டு இருந்தோம். ஒரு 60 வயது மதிக்க தக்கவர் கொஞ்சம் கறுப்பு, (கறுப்பு இனத்தை சேர்ந்தவர் அல்ல ) இலங்கை அல்லது இந்தியாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதுசரி எந்த நாடாக இருந்தால் என்ன, அவரும் எங்களை பார்த்தார். நாங்களும் அவரை பார்த்தோம். அதில் என் கவனிப்பும் அதில் இருந்தது.
அந்நேரம், கண் பார்வை இழந்த 14 வயது மதிக்க தக்க சிறுமி, white cane உடன் இன்னொரு பெண்ணின் உதவியோடு ரயிலை நோக்கி படிகளில் இறங்கி ஓடி வந்து கொண்டு இருந்தாள் .அவர்கள் வரவும் ரயில் வரவும் சரியாக இருந்தது. அவளை கூட்டி வந்த பெண் சிறுமி ரயில் ஏற வைத்து விட்டு திரும்பி போய்க்கொண்டு இருந்தாள் . எல்லோரும் ஏறிக்கொண்டோம் . எல்லோரும் என்றால் அந்த சிறுமி, அந்த 60 வயது மதிக்க தக்க மனிதர் , நான் என் கணவர். அந்த ரயிலில் இரண்டு படிகள் ஏறினால் மேலே போகும், அந்தளவு உயரத்தில் ஏறி இருந்தேன். அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதே நேரம் என் கவனிப்பு அந்த சிறுமி மீது இருந்து கொண்டே இருந்தது.
அந்த மனிதர் அந்த சிறுமியை பார்த்து ஒரு இடத்தை குறிப்பிட்டு சொல்லி அங்கே நீ வருவதை பார்த்து இருக்கிறேன், என்று ஆங்கிலத்தில் சொன்னார். அவர் அப்படி சொன்னதும் “ ஓ அப்பிடியா , அப்படியானால் எனக்கு Paramatta வந்தது சொல்லுங்கள் என்றாள் இயல்பாக. “ ஓ அதுக்கென்ன நிச்சயமாக “ என்றவர், உன் பெயர் என்ன என்று சிறுமியிடம் கேட்க, என் பெயர் ஜெனி என்றவள் திருப்பி உங்கள் பெயர் என்ன என்று கேட்க, விருப்பமே இல்லாமல் “ஜோன்” என்று பார்த்து கொண்டு இருந்த எனக்கு புரிந்தது.
அவருக்கு தன் பெயர் கேட்டது பிடிக்கவில்லை. அடுத்ததாகவும் அந்த சிறுமி ஒரு கேள்வி கேட்டாள், Where are you from என்றதும், its ok என்றார், வேண்டா வெறுப்பாக. அவருக்கு புரிந்து இருக்கும் எங்களது கவனிப்பும் பார்வையும் அவர் மீது இருப்பது.
சடார் என எழுந்து எங்கள் கண் பார்வையை விட்டு மறைந்து போய் நின்று கொண்டாரா இல்லை வேறு இடத்தில போய் அமர்ந்தாரா என்று தெரியவில்லை.
என் நோக்கம் எல்லாம் அந்த சிறுமி இறங்க வேண்டிய இடத்தை தவற விட்டு விட கூடாது என்பதில் குறியாக இருந்தேன். ஒவ்வொரு ரயில் நிலையத்தின் பெயரையும் கவனமாக கவனித்து கொண்டு இருந்தேன். அந்த சிறுமி எதுவுமே தெரியாமல் கையில் உள்ள ஒரு பொருளோடு விளையாடிக்கொண்டு இருந்தாள் .
Paramatta என்ற இடம் வந்ததும் நான் சொல்ல திரும்ப அந்த சிறுமி, is it Paramatta என்றாள் , “Yes என்று உரக்க சொன்னேன் . “Thank you “ என்றவாறு தைரியமாக இறங்கி போய்க்கொண்டு இருந்தாள் .
அந்த பெண்ணுக்கு இடம் வந்ததும் சொல்கிறேன் என்று சொன்ன ஆளை தேடினேன், கண்ணுக்கு எட்டிய தூரத்தில் காணவில்லை. எமக்கு பிடிக்காத ஒன்றை எப்பவும் எவரிடமும் கேட்க கூடாது, கேட்டால் அடுத்தவரும் அதே வினாக்களை நம்மை நோக்கி வீசுவார்கள் என்பதை மறக்கவே கூடாது.
கருத்துகள்
கருத்துரையிடுக