உன்னைத்தாண்டி
ஒரு பெண்ணுக்கு இதைவிட பெரிய அவமானம் வந்து விட முடியாது. அந்த அவமானத்தால் வெட்கி கூனிக் குறுகி போனாள் மாலு. எனக்கா இதை சொல்கிறான் . இவனை நம்பியா, அம்மா, அப்பா ,சகோதரங்கள் எல்லோரையும் விட்டு மலைப்போல இவனையும், இவன் பெற்றோரையும் நம்பி திருமண பந்தத்தில் இணைந்து 10 வருடங்கள் வாழ்ந்து இருக்கிறாள்.
எத்தனை விசாலமான நம்பிக்கைகள் , எதிர்பார்ப்புகள், எல்லாவற்றையும் அரை செக்கனில் தவிடு பொடியாக்கி விட்டானே. இவனால் எப்படி முடிந்தது , இதை இப்படி சொல்ல. இப்படி ஒரு நிலை வரும் என்று அவள் என்றுமே சிந்தித்து பார்த்தது இல்லை. ஒன்றாக சிரித்துப் பேசி, இன்பம் துன்பம் பகிர்ந்து, ஒன்றாக உறங்கி எழுப்பி, இது எப்படி சாத்தியம்.
“ மாலு நீ இதே வீட்டில் இருக்கலாம் “ அவன் மெதுவாக சொன்னான். இது சலுகையா , அனுமதியா இல்லை விருப்பமா, இல்லை அனுதாபமா மாலு அவனை பார்த்த, பார்வையின் வீச்சு தாங்காமல் அவன் தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.
இன்று அவன் பெற்றோர் விருப்பப்படி இரண்டாவது திருமணத்துக்கு தயார் ஆகி விட்டான். தனக்கு ஒரு வாரிசு வேண்டும். தன் பெற்றோரின் ஆசைக்கு, ஒரு பேரக்குழந்தையை பெற்று கொடுக்க அவன் சந்ததியை காக்க தயாராகி விட்டான். அதற்கு மாலு அருகதை இல்லாதவள் என்று முத்திரை குத்தியாகி விட்டது.
ஒரு குழந்தை பெற முடியாது என்று தாங்களே, தீர்மானித்து விட்டார்கள் .வைத்தியர்களின் ஆலோசனை பயன் அளிக்கவில்லை. என்று உடனேயே முடிவு செய்து விட்டார்கள். இதற்கு தீர்வு
மறுமணம் தான் என்று முடிவு செய்து விட்டார்கள். பலநேரங்களில் சிலவற்றை பெற்றோரின் அடங்கிய பிள்ளைகளாக இருந்து நடித்து தங்களுக்கு வேண்டியதை சாதிப்பதில் சிலர் வல்லவர்கள்.
“மாலு எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் . அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.நீ நல்ல மனைவியாக தான் இருந்து இருக்கிறாய்,ஒரு நல்ல மனைவியாக இருந்தால் போதாது , ஒரு தந்தை ஆகும் கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது.அதை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் நானும், நீயும் இருந்து இருக்கிறோம் ஆனால் அது உன்னால் முடியவில்லை எனும் போது என் பெற்றோர் பேரக்குழந்தையை பார்க்க விரும்புகிறார்கள். அவர்களின் அந்த விருப்பத்தை தவறு என்றும் சொல்ல முடியாது.
அது அவர்கள் ஆசை, நியாயம் எல்லாம் இருக்கிறது. நான் ஒரே மகன். நீ என்னை நம்பு , தாராளமாக எங்கள் வீட்டில் இருக்கலாம். அவன் சொல்லி முடிக்க அவனை மாலு நிமிர்ந்து பார்த்த பார்வையில்
“நான் இருக்கலாம் இருந்தால், உங்கள் பெற்றோருக்கு பணிவிடைகள் , சேவைகள் செய்ய சம்பளம் இல்லாத வேலைக்காரியாக , முகத்தில் காரி உமிழாத குறையாக சொல்லி விட்டு முகத்தை திருப்பி கொண்டாள் .
“மிக்க நன்றிகள் அசோக், நீங்கள் செய்த எல்லா நல்லவற்றுக்கும் நன்றி. இதுக்கு மேலே நீங்கள் எந்த நன்மையையும் செய்து முடியாது. Thank you so much “
அவள் தன் உடைகளை எடுத்து சூட்கேஸ்சில் அடைந்து கொண்டாள் .வேலை இடத்திலும் நீண்ட கால விடுமுறை கேட்டு வாங்கிக்கொண்டு புறப்பட்டு விட்டாள் ஊருக்கு, பெற்றோரை பார்க்க.
புறப்படுவதுக்கு முதல் நாள் தோழியின் அறையில் போய் தங்கிக்கொண்டாள். அவள் உறங்காமல் புரண்டு புரண்டு படுப்பதை கண்ட தோழி, “மாலு யோசிக்காமல் ஊருக்கு போய்ட்டு வா, வந்தே இங்கேயே தங்கிக்கொள் “ மாலியை தோழி சமாதான படுத்த முயன்றாள் .
மாலி மிகவும் வறட்சியாக , இனி யோசிக்க எதுவுமே இல்லை.முடிந்து போன அத்தியாயம் என்று திரும்பி படுத்தாள்.
அடுத்த நாள் விமான நிலையத்தில் தோழியே கொண்டு போய் விட்டாள் . கூடவே நின்று பேசிக்கொண்டு இருந்தாள் பக்கத்தில் யாரோ நிற்பது போல உணர்ந்து திரும்பி பார்த்தாள் மாலு. வெறும் யாரும் இல்லை மாலுவின் கணவனே தான் .தோழி மௌனமாக விலகினாள் .
“மாலு நீ என்னை …”அவனை முடிக்க விடவில்லை
“உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை, உங்களுக்கு உண்டு ம் உங்கள் பெற்றோருக்கும் உண்டு , வேற…” என்ற போது எதுக்கடா நிற்கிறாய் என்றது போல இருந்தது.
மாலு மெதுவாக நடக்க தொடங்கினாள், தோழியை திரும்பி பார்த்து விட்டு.போனவள் எதோ ஞாபகம் வர ஓடி வந்தவள் தன் கைப்பையில் சுற்றி வைத்திருந்த ஒரு சின்ன பையை அவனிடம் திணித்து விட்டு “இனி இது என்னிடம் இருக்க வேண்டியது இல்லை” என்று நடந்தாள் . அவன் மெதுவாக நடக்க தொடங்கினான்.
5 வருடங்களின் பின் விமான நிலையத்தில் “ டேய் கண்ணா , கண்ணா நில்லு “ என்று நாலு வயது குழந்தையின் பின்னே ஓடிக்கொண்டு இருந்தாள் மாலு. தூரத்தில் பறக்கும் விமானத்தை காட்டி, “அப்பா , அப்பா “என்று ஓடியதில் முன்னுக்கு போய்க்கொண்டு இருந்த தம்பதியரில், எதிர்பாராமல் மோதி நிலை குலைந்து விழ போனவனை மாலு பாய்ந்து பிடித்தாள் .
அந்த பெண்ணும் அதே வேகத்தில் திருப்பி பிடிக்க எத்தனிக்க “ஓ உங்கள் குழந்தையா , so cute “ என்ற அந்த பெண் “ இங்கே பாருங்கள் எவ்வளவு அழகான குழந்தை” என்று தன் கணவனுக்கு குழந்தையை காட்டிய போது , நிமிர்து பார்த்த அசோக் , மாலுவை கண்டதும் இரண்டடி பின் வாங்கினான்.
மாலு சிரித்து கொண்டே, “ ஓ குழந்தை அவன் அப்பா போல “என்ற படி அசோக்கை பார்த்தாள் . அப்பா என்றதும் அந்த பெண் சுற்றும் முற்றும் பார்த்ததை கவனித்த மாலு “ அவர் ஒரு விமானி , இன்று என்னுடன் வரவில்லை அவரை பார்க்க தான் போய் கொண்டு இருக்கிறேன் என் குழந்தையுடன் , “பெருமிதமாக சொல்லி கொண்டே தனது குழந்தையின் பிஞ்சு கரங்களை உறுதியாக பிடித்துக்கொண்டாள், வெற்றி தோல்வியை யாருமே தீர்மானிக்க முடியாது. எப்பவும் எதுவும் நடக்கலாம். அவளை வெல்ல வைத்த அந்த பிஞ்சு கரங்களை பற்றி தூக்கி முத்தமிட்டுக்கொண்டு கம்பீரமாக நடந்தாள் மாலு.
கருத்துகள்
கருத்துரையிடுக