உலகத்தில் தாங்கள் பிறந்த நாட்டுக்கு போக பயம் படும் ஒரு இனம் என்றால் அது இலங்கை தமிழர்களாக தான் இருக்க முடியும். குற்றம் செய்தவன் பயப்படுவதில் அர்த்தம் உண்டு. ஆனால் குற்றமே செய்யாமல் பயப்படுவது என்றால் நாங்கள் தான். எனக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் போக மட்டுமே நெஞ்சினுள் ஒரு பயம் கவ்வும். இலங்கையில் குற்றமே செய்யாமல் விமான நிலையத்தில் குற்றம் சாட்ட முடியும், இந்தியாவில் நீங்கள் எதுவுமே பேசாமல் விமான நிலையத்தில் மரியாதையை இல்லாமல் ஒருமையில் பேசுவார்கள், இரண்டு இடத்திலும் பணம் கறப்பதே முதல் வேலையாக இருக்கும். சீனாவை எவ்வளவு தான் நாங்கள் நையாண்டி கேவலமாக பேசினாலும் தைரியமாக எந்த வித பயமும் இல்லாமல் போக கூடிய நாடு என்னை பொறுத்தவரை.
என் தந்தையை பார்க்க என்று ஊருக்கு போனேன் . என் தந்தையை பார்க்க போனால் நான் எங்கும் போக விரும்புவது இல்லை, அவருக்காக போகிறேன், அவரோடு பொழுதை கழிப்பதை தான் விரும்புவேன். அதனால் என் விடுமுறைகள் கொழும்பிலேயே அநேகமாக முடிந்து விடும். என் விடுமுறை முடிந்து புறப்படும் நாளும் அருகில் வர என் ஆருயிர் தோழி, வயதான அவர் தாயார், என் தோழியின் கணவர் , பிள்ளைகள் எல்லோரையும் பார்க்க வேண்டும், அவர்கள் குடும்பத்தில் என்றும் நானும் ஒருத்தி, என்னை பார்க்க என் தோழி கொழும்புக்கு வந்திருந்தாலும் வயதான அம்மாவை பார்க்காமல் போவது சரியில்லை என்பதால் ஒரு முறை யாழ்ப்பாணம் போவோம், என்று நினைத்தேன்.
என் தந்தை தான் இம்முறை வரவில்லை என்று பஞ்சி படவே, நான் சரி போய் இரண்டு நாளில் வந்து விடுவோம் என்று புறப்பட்டேன். அப்போ தான் புது குண்டை தூக்கி போட்டார்கள் இரவில் , வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பாஸ் எடுக்க வேண்டும் என்று, அட கடவுளே ஸ்கூல் பாடங்களில் கூட பாஸ் காணாத நாங்கள் பாஸ் எடுக்கிறதா அது எங்களுக்கே கவுரவத்துக்கு இழிவு இல்லையா. இலங்கை அடையாள அட்டை இருந்தால் சரி போகலாம் என்றார்கள். ஆகா அடிச்சு லக் என்று அடையாள அட்டையை எடுத்து மேசையில் போட்டேன் .
என் கணவரிடம் என் தோழியை பார்க்க போவதை பற்றி சொல்லி விட்டேன். ஆனால் என் சகோதரிகள் இடத்தில் சொல்ல வில்லை. ஊருக்கு போகிறேன் என்று . சொன்னால் போன் அடித்தே என்னை அன்பில் டோர்சேர் பண்ணி கொன்று போடுவார்கள். அதிலும் பாஸ் இல்லாமல் போகிறேன் என்றால் தொலைந்தேன். என் கணவரிடம் எடுத்து அழுது என்னை போகாமல் பண்ணி விடுவாள் என் கூட பிறந்த பாசக்கார சகோதரி.
பஸ் சீட் புக் பண்ணி, ஒரு பெண்ணாம் பெரிய பஸ்சில் ஏறும் போது பார்த்தேன், பஸ் சாரதி, அவர் உதவியாளர் இருவரும் சிங்களம் பேசி கொண்டு இருந்தார்கள். ஒரு தமிழரையும் காணவில்லை . சரி என்று போய் அவர்களிடம் யாழ்ப்பாணத்தில் எங்கு எல்லாம் நிறுத்துவீர்கள் என்று கேட்டேன். , கொடிகாமம், சாவச்சேரி, பண்ணை என்று சொல்ல நான் என்னை யாழ்ப்பாணத்தில் டௌனுக்குள் இறக்கி விட முடியுமா என்று சிங்களத்தில் கேட்டேன் . அதுக்கு என்ன நிச்சயமாக இறக்கி விடுகிறேன்.
சாவச்சேரி கடக்க ஞாபக படுத்துங்கள் என்றார்கள் பண்பாக. என் தோழி சொன்னாள் எந்த இடம் நேரம் சொல்ல சொல்லி தானும் மகனும் என்னை அழைத்து செல்ல வருவதாக. என் தோழிக்கு தொலைபேசியில் அழைத்து யாழ் டவுன் கோப்பி ஷாப் பக்கத்தில் நிற்க சொன்னேன்.
முன்பு எல்லாம் யாழ்ப்பாண டவுன் கண்ணை கட்டி விட்டால் எந்த பக்கத்தாலும் வர தெரியும், இப்ப என்னவோ இடம் வலம் தெரியாமல் இருந்தது எனக்கு. பஸ்சில் இடையில் சாரதி உதவியாளராக ஒருவ தமிழரும் இடையில் இருப்பதை கண்டேன். சாவச்சேரி வர அந்த பஸ்சில் வேலை செய்யும் தமிழ் உதவியாளரை , என்னை யாழ்பாணத்தில் டௌனுக்குள் இறக்க சொல்லி சொன்னேன்.
அவர் இந்த பஸ் அங்கெல்லாம் நிற்காது பண்ணையில் தான் நிற்கும் என்றார் எதோ தான் பஸ் சொந்தக்காரர் என்று, பஸ்சில் வேலை செய்யும் அவருக்கே அந்தளவு அதிகாரமாக பேச முடிந்தால் அந்த பஸ்ஸை ஓட வைக்கும் எங்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும். “ மன்னிக்க வேண்டும் அவர்கள் தான் ஞாபகம் படுத்த சொன்னார்கள், “ என்றேன் கொஞ்சம் மெதுவாக தற்செயலாக அவர்களை கேட்கட்டும் என்று , அவரோ இது தான் இந்த பஸ்சின் கடைசி தரிப்பிடம் பண்ணை தான் என்றார்.
எனக்கு என்னையறிமால் கோபம் வந்தது படாரென சீட்டை விட்டு எழுந்து சாரதி இருக்கும் இடத்துக்கு கிட்ட போய் சிங்களத்தில் சொன்னேன் என்னை யாழ்ப்பாணத்தில் டௌனுக்குள் இறக்கி விட சொன்னேன் ஞாபகம் இருக்கு தானே என்று, “ நீங்கள் இருங்கள் நான் பஸ் நிறுத்த நீங்கள் இறங்கலாம், என்றவர் தமிழரிடம் , இந்த அக்காவின் பொதிகளை இறக்கி கொடு “ என்றதும் சத்தம் இல்லாமல் பொதிகளை இறக்க சென்றார். நன்றி சொல்லி விட்டு இறங்க என் தோழியும் மகனும் என்னை வரவேற்க காத்து நின்றார்கள். நாட்டில் அரசியல் பிரச்சனை இருக்கலாம் ஆனால் எங்கள் ஆட்களிடம் சிலநேரங்களில் மரியாதையை கொடுத்தாலும் கேட்டு கூட வாங்க முடிவது இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்