நயப்பட உரைத்தல்
எல்லோருக்கும் நம்மோடு யார் பேசினாலும் பண்பாக, மரியாதையாக பேசினால் ரொம்பவே பிடிக்கும். அவர்கள் ஒரு உதவி கேட்டால் கேட்டதற்கு அதிகமாகவே செய்து கொடுப்போம் காரணம் நயம் பட பேசுதல் தான்.
சின்ன குழந்தைகளை நாம் தூக்கி செல்லம் கொஞ்சி விளையாடும் போது பட்டு குட்டி, புச்சி குட்டி, செல்ல குட்டி என்று எல்லாம் இல்லாத வார்த்தைகளை சொல்லி எங்கள் அன்பை வெளிக் கொணர்கிறோம் இல்லையா? குழந்தையும் மகிழ்ச்சியாக ஆரவாரமாக எங்களை கொண்டாடி மகிழ்கிறதே ஏன் அந்த மொழி புரிந்தா இல்லை, அதில் இருக்கும் கனிவு, சொல்லப்படும் விதம், அன்பு, எல்லாம் வார்த்தையில் காட்டும் அழகு.
நாங்கள் வளர்ந்த குழந்தைகள் அன்பை அதிகாரமாக, ஒரு ஆயுதமாக , கண்டிப்பாக சொன்னால், எங்களுக்கு அதை மகிழ்ச்சியாக செய்ய மனம் ஒப்புவது இல்லை. காரணம் அதை செய்ய சொல்ல படும் விதமே அன்றி வேறில்லை.
எல்லோருக்கும் வேண்டியது, மரியாதை, பண்பு, அது சின்னவர் பெரியவர் என்ற வேறுபாடு பேதம் கிடையாது. "இதை செய், என்பதுக்கும் "தயவுசெய்து இதை ஒரு முறை செய்து தர முடியுமா " என்று கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதிகார தோரணை யாருக்குமே பிடிப்பதில்லை. ஒருவரிடம் ஒரு உதவி தேவைப்படும் போது இருக்கும் அணுகு முறையில் தான் எல்லாமே இருக்கு.
ஒருவரிடம் நீங்கள் பண்பாக , மரியாதையாக நயம் பட கேட்கும் போது, அந்த உதவி செய்ய முடியாத பட்சத்தில் கூட அதை மறுத்து மறுப்பு சொல்ல ஒரு கணம் யோசிப்பார். அதிகம் ஏன் பார்த்துக்கொண்டு இருப்பவருக்கு உங்கள் மீது ஒரு தனி மரியாதை வரும். ஒரு நல்ல பழக்கத்தையை மற்றவருக்கு சொல்லி கொடுப்பதற்கு பதிலாக, நீங்கள் அதை உங்கள் வாழ்க்கையில கடைபிடித்து வாழ்ந்து காட்டினாலே பலர் பின்பற்றுவார்கள்.எங்களை பார்த்து கற்றுக்கொள்ள நாங்கள் மற்றவர்களுக்கு எப்போதும் ரோல் மாடலாக இருக்க வேண்டும். எப்போதும் மற்றவர்கள் தான் எங்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும் என்பது இல்லை.
Polite என்று ஒரு ஆங்கில வார்த்தை இருக்கிறது. குழந்தைகள் முதல் வளர்ந்தவர்கள் வரை, நாங்கள் முறையாக நாகரீகமாக, அன்பாக , பண்பாக ,கரிசனையுடன் பேசினால் அதாவது பொலைட்டாக , அதுவே மிக சிறந்த ஒழுக்கம்.
அதைவிடுத்து "இங்கே வா வந்து இதை செய், உனக்கு செய்ய வேண்டும் என்று யோசனை இல்லையா" என்றால் எப்படி செய்ய தோன்றும், "இங்கே வா கண்ணா , ராசா , அப்பன், இதை ஒருக்கா செய்து தாடா" என்பதும் வார்த்தைகளில் மட்டுமல்ல செயல்களில் கூட வித்தியாசம் காட்டும். எல்லோராலும் முடியாததை கூட முடியும் என்று செய்ய தோன்றும்.
குறிப்பாக எமது நாட்டில் இலங்கையில் இதை கண்கூடாக பார்த்தேன். அதிலும் குறிப்பாக யாழ் பெரியாஸ்பத்திரி பக்கம் போகவே விரும்ப மாட்டேன் காரணம் மரியாதையை கொடுத்து பேச மாட்டார்கள். இப்ப எப்படி என்று தெரியாது, அதனால் தனியார் வைத்தியசாலைகளுக்கு தான் போவது வழக்கம். .யாழ் பெரியாஸ்பத்திரியில் உள்ள பணியாளர்கள் சிலர், "நீ இங்கே வா, அதில போய் இரு, எனக்கு அதை பார்க்கவே பயமாக இருக்கும்.(நட்புகள் உரிமையாக பேசுவது விதிவிலக்கு ) , இதே முறை இந்தியாவில், விமானநிலையத்தில் வேலை செய்யும் சில பணியாளர்களும் கடை பிடிக்கும் மரியாதை அற்ற முறைகள்.
யாழ்ப்பாணத்தில் ஒருமுறை என் வைத்திய கலாநிதி யாழ் அரச வைத்தியசாலைக்கு வர வேண்டும் அங்கே தான் சில சோதனைகள் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார் . வேற வழியில்லை போனேன் . எனக்கோ கொஞ்சம் பயம், மரியாதையை இல்லாமல் பேசுவார்கள் என்று, அதனால் நான் போய் சத்தம் போடாமல் இருந்து விட்டேன். அங்கு கடமையில் உள்ள பெண் பணியாளர் " இங்கே வா என்று மற்றவர்களை அழைப்பதை கவனித்து கொண்டு இருந்தேன். எல்லோரும் போய் முடியட்டும் என்று, என்ன ஆச்சரியம் என்னை அழைத்த அந்த பெண் மிக மரியாதையாக பேசினார் என்ன காரணம் என்று தெரியாது. இப்படி பலரும் அங்கே போக பயப்படுவார்கள் , அதற்கு காரணம் பேசும் வார்த்தைகளில் இல்லாத பண்பும், மரியாதையை இன்மையும் தான்.
நீ, என்பது தப்பான வார்த்தை கிடையாது, ஆனால் அது சொல்ல படும் இடம், ஆள், சந்தர்ப்பம் சொல்லப்படும் விதம் எல்லாம் எம்மை தடுமாற வைக்கும். ஆதலால் எப்போதும் எல்லோரிடமும் மரியாதையாக பண்பாக பேசுவதே அழகு, அது பேசுபவருக்கும் கேட்பவருக்கு பார்ப்பவருக்கும் மிக சிறப்பு. நயம் பட உரைத்தல் என்றும் அழகே.
கருத்துகள்
கருத்துரையிடுக