உற்சாகமான வார்த்தைகள் கஷ்டத்தில் இருக்கும் ஒருவரால் அவ்வளவு எளிதில் ஜீரணித்து விட முடிவது இல்லை, மனசு கஷ்டத்தையும் கவலையை நோக்கியே நீர் பள்ளத்தை நோக்கி ஓடுவது போல மனமும் ஓடும், அந்த மனதை இழுத்து பிடித்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர படாத பாடு வேண்டி இருக்கும். என்ன கஷ்டப்பட்டு உற்சாகப்படுத்திக்
கொண்டு வர யாரோ ஒருவர் வந்து தேவையில்லாமல் ஒன்றை சொல்லி சாண் ஏற முழம் சறுக்கிய கதையாக முடிகிறது பலநேரத்தில்.
வேண்டும் என்று எந்த வார்த்தைகளையும் யாரும் அநேகமானவர்கள் சொல்வதில்லை , என்ன வார்த்தைகளை கையாள , எங்கே எதை பேசுவது என்று தெரியாத , மற்றும் வார்த்தைகளின் பாதிப்பு ஒருவரை எந்த அளவு காயப்படுத்தும் , வீழ்த்தும் என்று புரியாமை கூட காரணமாக இருக்கலாம்.
அதனால் எப்பவும் இழப்புகள், கஷ்டங்கள் , துன்பங்கள் ஏன் யாரோடும் எப்பவும் பேசும் போது அவர்களுக்கு எதிர்மறை சிந்தனையான எண்ணங்கள் வராத மாதிரி நல்ல வார்த்தைகளை , எண்ணங்களை பேச கற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் பேச்சு எண்ணம் அடுத்தவரை எப்படி பாதிக்கும் என்பதை எண்ணி பார்க்க தெரியாவிட்டால் கூட, காயப்படுத்தாமல் இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.
நாம் ஒருவருக்கு நல்ல உதவி செய்ய வேண்டும், வாரி வழங்க வேண்டும் என்பது இல்லை . ஆனால் எங்கள் வார்த்தைகளால் மனசு குழம்பி போகாத படி பேச பழகி கொள்ள வேண்டும். அதுவே பெரிய உதவி உபகாரம் தான்.
இப்ப எல்லாம் பத்திரிகை, முகநூல் , சோசியல் மீடியா எல்லாவற்றிலும் எப்பவும் சோகமும் , தேவைற்ற விடயங்களும் தான் உலாவி வருகின்றன. அவற்றை தவிர்த்து உற்சாகம் தரும், சிரிக்க , சிந்திக்க வைக்க வேண்டும் , அவை நேர்மறை சிந்தனைகளை கொடுக்க கூடியதாக இருந்தால் கொஞ்சம் மனது பாதாளத்தில் தள்ளி விடாமல் இருக்கும்.
வார்த்தைகள் வலு மிக்கவை. குறிப்பாக ஒருவரின் இழப்பில், மீளா துன்பத்தில், கஷ்டத்தில் இருக்கும் போது தைரியமான , எல்லா கஷ்டங்களும் கடந்து போகும் , எனும் ஆறுதலான தன்னம்பிக்கை மிகுந்த வார்த்தைகள் அவசியம். நம்பிக்கை மனிதனின் மிக பெரிய ஊன்று கோல் அதை தவறவிட்டால் வீழ்ந்து விடுவார்கள். பேசும் போது எப்போதும் நேர்மறையான , சாத்தியமான , சாதகமான வார்த்தைகளை பேச பழகிக்கொள்வோமாக.
துன்பம் இல்லாத மனிதரே இல்லை. சிரித்துக்கொண்டே இருப்பவர்கள் துன்பம், சோகம் அற்றவர்கள் அல்ல, பல நேரத்தில் அவர்கள் காட்டிக்கொள்வதில்லை என்பதே உண்மை. வார்த்தைகள் வலு மிக்கவை. ஒருவர் துன்ப படும் போது நாங்கள் கொடுக்கும் பணம் , பரிசு பொருட்கள் எல்லாம் மகிழ்ச்சியை கொடுத்து விடுவது இல்லை. ஆனால் நம்பிக்கையான நாலு வார்த்தைகள், நாம் இருக்கிறோம் என்கிற நம்பிக்கைகள் பலத்தை கொடுக்கும்.
முடிந்தளவு நாலு பேருக்கு நாலு நல்ல வார்த்தைகள், நல்லதாக சொல்ல முடியவில்லை என்றாலும், அவர்கள் நம்பிக்கைகள் கெடுக்காத மாதிரி , சோர்ந்து நம்பிக்கை இழக்காத மாதிரி பேசி பழகுவது எல்லோருக்கும் நன்மை பயர்க்கும் .
நம்பிக்கையோடு அடுத்த வருஷத்தில் வரவேற்று கால் வைப்போமாக.
கருத்துகள்
கருத்துரையிடுக