நானும் ......
இந்த உலகம் ஆண்களுக்கானது தான். என்ன தான் பெண்கள் தங்களுக்கான பிரச்சனைகள் , அசௌகரியங்கள் , கஷ்டங்கள், வலிகளை முன் வைத்து நீதி, நியாயம் கோரி போராடினாலும் அவை எல்லாம் வீண் வாதமும், சக்தி விரயமும் தான். எதாவது எழுதினால் பேசினால் பெண்ணியம் என்று முத்திரையை குத்தி விடுகிறார்கள்.
இந்த பதிவை ஆண்கள் தங்களுக்கு எதிரான பதிவாக கருத கூடாது. ஒரு பெண்ணுக்கு இழைக்க படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் என்பது என் சகோதரிக்கோ, தோழிக்கோ, மனைவிக்கு , அல்லது மகளுக்கு , நடந்தால் என்ன நிலைமை என்று எண்ணிட வேண்டும். பெண்ணுக்கு உடல் ரீதியில் அசௌகரியம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ஐந்து பெண்ணுக்கு ஒரு பெண் என்ற கணக்கின் படி பெண்கள் வன்முறைக்கு உற்படுத்த படுகிறார்கள் அல்லது காயப்படுத்த படுகிறார்கள். இது எல்லா வயதினை உடையோரையும் பாதிக்கறது. RAINN தகவலின் படி 12-17-15% , 18-34 -54%, 35-64 -28%, 65 - 3% என்ற வீகிதத்தில் துன்புறுத்த படுகிறார்கள். பல சொல்லப்படாமல் போகிறது, மறைக்க படுகிறது. இதில் அன்போ பொறாமையோ இல்லை துஷ்பிரயோகம் என்பது அது ஆண்களின் பலமும், கட்டுப்படுத்துவதுமாகும்.
“Me Too “ மீ டூ , நானும் . என்று ஒரு பெண் பகிரங்கமாக அதை ஒப்புக்கொள்ள துணிகிறாள் என்றால் அவள் எப்படி பட்ட சூழ்நிலையில், எப்பேர்ப்பட்ட மனயுளைச்சலுடன், வலியோடு சொல்ல வருகிறாள் என்றால் எத்தனை தூரம் பாதிக்க பட்டிருக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படும் போது , அதற்கான நீதியை தட்டி கேட்க வேண்டியது சமூகத்தின் கடமை, அதில் முக்கிய அங்கம் வகிக்க வேண்டியவர்கள் ஆண்கள் , அந்த பெண்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மாறாக நடப்பது என்ன? ஒரு பெண் தான் பாலியியல் துன்புறுத்தலுக்கு உள்ளானால் , அந்த பாதிப்பை யாரும், யாருக்கும் எளிதில் சொல்லி விடுவதில்லை. அவற்றை எல்லா பெண்களும் மறைத்து விட்டு கடந்து போகவே எத்தனிக்கிறார்கள். அதையும் மீறி ஒரு பெண் துணிந்து அதை பகிரங்கமாக சொல்லி , அந்த அத்துமீறலை செய்தவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும், அல்லது சமூகத்துக்கு அந்த நபரை கொண்டு வந்து முகத்திரையை கிழிக்க வேண்டும் முற்படும் போது பாதிக்க படுவது யார் ஆண்களா , நிச்சயமாக இல்லை.
ஒரு பெண்ணின் , சுயமரியாதை, அவள் தொழில், நற்பெயர், அவள் எதிர்காலம், என்ற அவள் மொத்த எதிர்காலமும் கேள்வி குறியாக , தன் வாழ்க்கையே பணயம் வைக்கின்றாள். எல்லாவற்றையும் சிந்திக்காமல் ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட வன்புணர்வு, துஷ்பிரயோகம் பற்றி வெளியிடும் போது அதற்கான பின் விளைவுகள், அவளை பற்றி அவதூறான , அபாண்டமான பேச்சுக்கள் பேசப்படுகிறது.அதை பல பெண்களும் செய்கிறார்கள் என்பது வருந்த வேண்டிய விடயம்.
ஊர் உலகறிய பெண் தனக்கு ஒரு ஆணால் ஏற்பட்ட துன்புறுத்தலை சொல்வதால் அந்த பெண் மொத்தமாக ,மறைமுகமாக ஒதுக்கி வைக்க படுகின்றாள் .ஆண்கள் பயப்படுகிறார்கள். அந்த பெண்ணுடன் பழைய மாதிரி பழகுவதற்கு, எங்கே தங்களை அந்த பெண் வீண் வம்பில, சிக்கலில் மாட்டி விட கூடும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள். அப்படி ஆண்கள் எண்ணுவதாக இருந்தால் “ஆண்களுக்கே தங்கள் மீது நம்பிக்கை இல்லை” என்று தானே எடுத்துக்கொள்ள வேண்டும். ஆண்களால் சலனமோ சபலமோ இல்லாமல் ஒரு பெண்ணிடம் நல்ல முறையில் நட்புறவுடன் உறவாட ஏன் தயங்க வேண்டும்.
அதிகமாக இதில் சிக்கி கொள்வது என்னவோ பெரிய புள்ளிகள் காரணம் அவர்கள் பணத்தால் நினைத்த பெண்ணை அடைய முடிகிறது. அவர்கள் குற்றவாளி எனும் தெரியும் பட்சத்தில் கூட அவர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில இருப்பதால் யாரும் அவரின் பகைமையை சம்பாதிக்க விரும்புவது இல்லை. அவரை பற்றி தெரிய வந்தால் கூட, அவர்கள் எப்போதும் போலவே நடமாடவே செய்கிறார்கள். பாதிக்க பட்ட பெண்ணே குற்றவாளி போல ஒதுங்கி, தனித்து விட படுகிறாள் என்பதே உண்மை.
இது ஆண்கள் உலகம் தான். பாவம் பெண்கள் போராடுகிறார்கள். குறிப்பாக இந்தியா போன்ற இடங்களில் பெண்கள் மொத்தமாக ஓரங்கட்ட படுகிறார்கள். மேலை நாடுகள் ஒன்றும் குறைந்த சளைத்தவர்கள் அல்ல. “ ஒத்து வா , இல்லை ஓரங்கட்ட படுவாய் “பாணி, “படுக்கையை பகிர் “ என்பதே உண்மை போல எண்ண தோன்றுகிறது. மேலைநாடுகளில் என்ன முறைப்பாடு செய்யப்பட்டால் , குற்றம் சாட்ட பட்டவர், அவரின் முறைப்பாடு நிரூபிக்க பட்டால் யாராக இருந்தாலும் , விசாரிக்க படுகிறார்கள். அவருக்கான தண்டனைகள் நிச்சயம் உண்டு. ஒரு பெண்ணின் தேகத்தை குறி வைத்தே எல்லாம் நகர்த்த படுகிறது என்பது மறுக்க முடியாது உண்மை.
ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை , அவமானத்தை துன்புறுத்தலை பகிரங்க படுத்த முதலில் அவள் குடும்பமே அவளுக்கு ஆதரவு அளிப்பது இல்லை என்பது வேதனை தரும் விடயம். அதன் பின் விளைவுகளின் பாரதூரம் , அப்படி அதையும் தாண்டி துணிந்து ஒருத்தி முறைப்பாட்டை முன் வைத்தால், அவளை ஏன்டா சொன்னோம் என்று அதீத மனயுளைச்சல் அடைய வைத்து விடுகிறார்கள் என்பது மறுக்க முடியாது உண்மை.
எந்த ஒரு கணவனும் தன் மனைவியும் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை சொல்ல துணியும் போது ஆதரவு கொடுக்க போவதே இல்லை, எங்கேயாவது ஓரிருவர் முற்போக்குவாதிகளாக இருக்கலாம் . ஆதரிக்கலாம்.
பெண் என்பவள் தெய்வம் கிடையாது. இரத்தமும் சதையுமுள்ள உணர்வுகள் உள்ள உயிர், அவளையும் உங்களை போலவே எண்ணினால் போதும், இந்த ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களும் வாழும் உலகம்.
கருத்துகள்
கருத்துரையிடுக