நம்பிக்கை
யாரையும் நம்புங்கள் தப்பே இல்லை, ஆனால் அதி தீவிரமாக நம்பாதீர்கள். அது உங்களை தீராத துன்பத்தில் தள்ளும், யாரும் உங்களை கண்மூடித்தனமாக நம்ப சொல்வதில்லை , உங்கள் பிரியம் தான் அளவு கடந்த நம்பிக்கையாக பரிணமிக்கிறது. ஆனால் அதே போல அதே அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் அவர்களும் பாத்திரமாக இருக்க வேண்டாமா. அப்படி எல்லோராலும் இருக்க முடியுமா என்ன. உலகில் விரல் விட்டு எண்ணி விடும் அளவுக்கு தான் அப்படி நம்பிக்கையான அதிசயங்கள் நிகழும்.
எல்லோருக்கும் ஆசை தான் நாங்கள் நம்புபவர்கள், நம்பிக்கை வைப்பவர்கள் அதற்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்று, ஆனால் என்ன மலை போல் நம்பி இருப்போம், எதிர்பார்க்காத அந்த ஒரு கணத்தில் நம்பிக்கை எனும் கோட்டை விழுந்து தவிடு பொடியாகி விடும்.
இப்படி தவிடு பொடியாகும் வரிசையில் பெற்றோர் பிள்ளைகளை நம்பி உடைந்து போய் இருக்கிறார்கள், பெற்றோர்கள் பிள்ளைகள் என்று எப்படியோ ஜீரணித்து விடுகிறார்கள். ஆனால் இந்த காதலன் காதலி ரகம் இருக்கே இது தான் உலகின் கணக்கு வழக்கு இல்லாமல் ஏமாந்து ,நம்பிக்கைகள் தகர்ந்து போகும் அதிகமானவர்கள். மற்றது நட்பு நம்ப வைத்து கழுத்து அறுத்து விடுவார்கள். நம்பிக்கை என்றதும் பணத்தில் ஏமாந்து போவது தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும், பணம் மட்டுமில்லை நம்பிக்கை மோசம் போவது, உணர்வுகளின் நம்பிக்கை மோசமே மிக கொடியது, மனப்பிளவு முதல் பல உளவியல் ரீதியான பல நோய்கள் வர காரணமாக அமைகிறது.
காதலர்கள் கொடுக்கும் நம்பிகைகள் எல்லை அற்றவை. எண்ணி பார்த்து ஈடு செய்ய முடியாதவை, அவற்றை மற்றவர்கள் பொய் என்று சொன்னாலும் அந்த இன்னொருவரின் வார்த்தைகளால் தகர்க்க முடியாத சம்பிராஜ்யம்.
என்ன ஒரு நாள் நம்பிக்கைகள் உடையும் போது , அந்த தோல்வி மிகவும் வலி மிக்கது .அதில் மீண்டு வரும் போது மனசு நினைக்கும் இனிமேல் யாரையுமே நம்ப கூடாது என்று என்ன மீண்டும், பாழாய் போன மனது எங்கேயாவது ஏமாறவே செய்யும்.
இவர்கள் தான் ஏமாற்றுக்காரர்கள் யாருமே இல்லை. எல்லோருமே ஏமாற்றுக்கார்கள் தான். எங்கேயோ ஒரு புள்ளியில் தெரிந்தோ தெரியாமலோ ஏமாற்றி விடுகிறோம். பலநேரத்தில் பலர் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்து கூட தொடர்ந்து, நட்பில் இருக்கிறோம். வீட்டில் கணவன் மனைவி ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் குடும்பம் நடத்துகிறார்கள். பலசரக்கு கடையில் தொடங்கி, அரசாங்கம், வங்கிகள் , மூலை முடுக்கு என்று இல்லலாமல் எங்கும் பரவி இருப்பது இந்த ஏமாற்று வித்தை , இந்த ஏமாற்று பலநேரத்தில் தெரிந்தே நடக்கிறது. ஆனால் அதில் நம்பிக்கை வைக்கிறோம் பாருங்கள் அப்போது தான் அடி வாங்க அச்சாரம் போடுகிறோம்.
பலநேரத்தில் நம்பிக்கையை உடைக்க வேண்டும் என்று யாரும் நினைத்து செய்வது இல்லை, என்ன சிலநேரத்தில் சந்தர்ப்பம் சூழ்நிலை அப்படி நடந்து விடுகிறது. ஆனால் என்ன உடைவது என்பது தீர்மான பின் எப்படி உடைந்தால் என்ன.
உலகில் அதிக ஏமாற்றம் நடக்கிறது என்றால் அது அன்பை வைத்து தான். அது உண்மையா பொய்யா என்று எல்லாம் ஆராய முடியாது. அன்பு என்று நம்பினால் போதும் அது எல்லாமே உண்மையாக தெரியும், நம்பிக்கைக்குரியதாக தோன்றும். அடிவாங்கி ஏமாந்து தலை குப்புற விழும் வரை அந்த அன்பு தான் நம்பிக்கை உடைந்து எங்களை அடி முட்டாள் ஆக்குவது.
அதனால் நம்பிக்கை வையுங்கள் , உங்கள் இரக்கத்தை காட்டி உங்களை நீங்கள் நம்பிக்கையை பணயம் வைக்காதீர்கள். ஏன் என்றால் நம்பிக்கை பலருக்கு வாழ்க்கை, சிலருக்கு சம்பவம். அதை எப்படி என்பது நீங்கள் தீர்மானித்து கொள்ளுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக