"நான் வேலையை விட போகிறேன்" என்று ஒரு தீடீரென முடிவு எடுத்து அதை கணவரிடம் சொன்ன போது , வேலையை விட்டுட்டு என்ன செய்ய உத்தேசம் என்றார், மிக சாதாரணமாக .அங்கே ஆச்சரியம் இல்லாமல் கேள்வி விழுந்தது எனக்கு ஆச்சரியமாக, இருந்தது. " நான் ஆசை பட்டதை செய்ய போறேன், வேலைக்கு போய் காசு உழைச்சது போதும் , இனி எனக்கு பிடிச்சதுகள் செய்ய போறேன், " என்றேன். "ஓ அப்ப இவ்வளவு நாளும் பிடிக்காததை செய்தது போல , ஒரு பார்வை பார்த்தார்.
"நான் கதை எழுத போறேன் , புத்தகம், ஆசை தீர வாசிக்க போறேன், இடைக்கிடை, தன்னார்வ வேலைகள், யோகா, உடற்பயிற்சி. நான் என் லிஸ்டை எடுத்து விட்டேன். " ஓ கதை, எதை பற்றி " என்றார்.
"தெரியாது , இனிமேல் தான் யோசிக்க போறேன் , தனியாக ஒரு ரூமில் இருந்து பேப்பர், பேனாவுடன் இருந்தால் கற்பனை வரும் "என்றேன், அவர் பேசாமல் போய் விட்டார்.
பிரம்ம முகூர்த்தத்தில் , விளக்கு ஏற்றி சாமி கும்பிடுவது மிக நல்லது , எப்பவும் வேலைக்கு போகும் போது அதிகாலை வழிபாடு செய்து பழகி விட்டது.
அதிகாலை 3.30 மணி மாடியில் இருந்து இறங்கி போய் கொண்டு இருந்தேன். ஒரு மோட்டார் சைக்கிள் ஒரு உறுமலுடன் , வீட்டின் முன்னே வந்து நின்றது, இந்த நேரத்தில் யாராக இருக்கும் யார் வீட்டுக்கு , ஒன்றுமே புரியாமல் கதவில் இருந்த கண்ணாடியில் என் உருவம் தெரியாமல் மறைந்துகொண்டு பார்த்தேன்.
ஒரு உயர்ந்த உருவம், கருப்பு நிற லெதர் உடையில் , கையில் கையுறை அதுவும், கருப்பு, ஆளை அடையாளம் சொல்ல எந்த விதத்திலும் எதுவும் இல்லை, உயரத்தை தவிர, எனக்கு எல்லா சமீபத்திய நிகழ்வுகள் எல்லாம் ஞாபகத்தில் வந்து போயின. பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் , அருகே சில பெண்கள் தீடீர் தீடீர் என காணமல் போயினர். சிலருக்கு என்ன நடந்தது என்று இன்றுவரை தெரியவில்லை, காணாமல் போனது என்ற பட்டியலில் சேர்த்து விட்டார்கள். சிலரை மீட்டு எடுத்தார்கள் பிணமாக . அவை எல்லாம் மனதில் வந்து போயின.
மோட்டார் வண்டியில் இறங்கியவன் ஒவ்வொரு வீடாக உற்று கவனித்து, படம் எடுத்தான். அந்த அதிகாலையில் என்னத்தை படம் எடுக்கிறாரோனோ. படம் எடுத்து முடிய போய் அந்த வீட்டு வாசல் கேட்டில் , ஒரு அடையாளம் போல ஸ்டிக்கர் ஒன்றை ஓட்டினான். எதிர் பக்க இரண்டு வீட்டில் செய்து முடிய , எங்கள் வீட்டையும் படம் எடுத்தான் . நான் என்னை முற்று முழுதாக மறைத்துக் கொண்டு குனிந்து சென்று யன்னல் திரைச் சீலையில் என்னை மறைத்துக் கொண்டு அவனை கவனித்தேன் . இருட்டில் முகம் தெரியாத மாதிரி ஹெல்மெட் முகத்தை மூடிக்கொண்டு இருந்தது. எங்கள் வீட்டை குறி பார்த்து இரண்டு மூன்று படம் எடுத்ததை பார்த்ததும் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. இவரை போய் எழுப்பலாம் என்றால், எழும்பி போடும் ஆர்ப்பாட்டத்தில் , அவன் கதவை உடைத்து கொண்டு வந்து சுட்டு
போட்டு போய் விடுவான்.
அவன் இடுப்பில் ஒரு ரிவால்வர், உறையில் செருக பட்டு இருந்தது. மெதுவாக எங்கள் கேட் அருகே வந்து ஸ்டிக்கர் ஓட்டினான், இது ஒவ்வொரு வீட்டுக்கான அடையாளம் போல, ஏதோ கிறுக்கியது
மாதிரியும் இருந்தது. அது அவர்களின் அடையாள மொழி அல்லது
முத்திரை ஏதோ ஒன்று, நாளையோ இல்லை, எதோ ஒரு நாள் எங்களை சூறையாட குறி பார்க்கும் படலம்.
எதிர் பார்க்காத அந்த தருணத்தில் எங்களுக்கு நேர் எதிர் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து ஒரு பெண் , வெளியே வந்தாள் , அவள் உடற்பயிற்சி செய்பவள், ஒரு நாளைக்கு 30 km வரை நடப்பாள். அவள் ஒரு ஜிம் பயிற்சியாளர்.
அவளை கண்டதும் போனை எடுத்து யாரையோ அழைக்க , ஒரு கார் வந்ததும், அவளோடு ஏதோ வாக்குவாத பட்டு அவளை காரில் பலவந்தமாக இழுத்து ஏற்றிக்கொண்டு கார் பறந்தது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. போலீசை அழைப்பதா அல்லது பொறுத்து இருந்து பார்ப்பதா, பயத்தில் விறைத்து போனேன் குளிருடன்.
விடிந்ததும் முதல் வேலையாக எங்கள் வீட்டு கேட்டில் ஒட்டிய பொருள் என்ன என்று தேட தொடங்கினேன். நான் போகும் போதே சனிடிஸிர் போத்தல் , அதை துடைக்க என்று சில துணிகளையும் எடுத்து சென்று இருந்தேன். எதை செய்தாலும் பிளான் பண்ணி செய்யணும் .நம்ம குரு சொல்லி இருக்கிறார்.
வீட்டு கதவு திறந்து இருக்க கண்ட கணவர் என்ன விடிய காலையில் கேட்டை தடவிக்கொண்டு நிற்கிறீங்க?என்றார் . "ஒன்றுமில்லை , கண்டவர்களுக்கு தினசரி தொடும் கேட் அதுதான் கோவிட் , வரும் முன் காப்போம் , என்றபடி அதில் ஒட்டி இருந்த மஞ்சள் நிற ஸ்டிக்கரை உரித்தேன்.
அதே நேரம் மற்றவர்கள் கேட்டில் என்ன நிற ஸ்டிக்கர் என்று கவனிக்க வேண்டும் என்று தோன்றியது. முன் வீட்டு பெண் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருக்க மெதுவாக " குட் மோர்னிங் டோனா " என்றபடி , ஸ்டிக்கரை தேடிய போது அங்கே சிவப்பு நிற ஸ்டிக்கர் , எனக்கு தலை சுற்றியது. அப்படியே எங்கள் வீட்டை நோக்கி அம்புக்குறி
நான் மயங்கி விழாத குறை , அப்படியே சாய்ந்து இருந்து யோசித்தேன். என் கணவர் அறையை பார்த்து விட்டு போகிறார் , நான் கதை எழுதுகிறேனா என்று .

கருத்துகள்
கருத்துரையிடுக