மங்களத்தை சுற்றி பிள்ளைகளான மூத்த மகன், வசந்த், மகள் மேகலா, கடைசி மகன் வினோத் எல்லோரும் கையில் ஒவ்வொரு பூங்கொத்தை வைத்துக் கொண்டு ஆச்சரிய படுத்தினார்கள். மங்களம் எதிர் பார்க்கவே இல்லை, மதர்ஸ் டே அன்று சொல்லாமல் கொள்ளாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து வந்து , தாயை மகிழ்வித்து கொண்டு நின்றார்கள்.




மூத்த மகன் வசந்த் அமெரிக்காவில் ஒரு பெரிய கம்பெனியில் CEO, மகள் டாக்டர், இளைய மகன் நாசாவில் விஞ்ஞானி . எல்லோரும் திருமணம் செய்து தங்கள் குடும்பம், குழந்தைகள் வேலை என்று ஆகி விட்டார்கள். ஆனாலும் இப்படி தீடீர் என்று எல்லோரும் அப்பப்ப அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது உண்டு. அம்மாவை அன்பு வெள்ளத்தில் மிதக்க விட்டார்கள். மங்களத்தின் கணவன் ஒரு பொறியியலாளர், வசதியான வாழ்க்கை, தேவையான அளவு பணம், ஒன்றுக்கு இரண்டு மூன்று வீடு . இரண்டு வருடங்களின் முன் ஒருநாள் இரவு படுக்கைக்கு போன கணவர் எழவே இல்லை. அன்று முதல்

வாழ்வே சூனியமாக போனது. பேச்சு துணைக்கு ஆள் இல்லை, சண்டை போட கூட ஆள் இல்லை, கோபம் கொள்ள, பேசி சிரிக்க என்று எதையும் பேசி சிலாகிக்க யாருமே இல்லாமல் தனியாக விட பட்டது , இனம்புரியாத ஒரு பயம். பிள்ளைகள் எல்லோரும் அவர்கள் வேலை ,குழந்தைகள் என்று பிஸி, அங்கு போய் அவர்களுக்கு சிரமம் கொடுக்க பிடிக்கவில்லை அம்மா மங்களத்துக்கு.

குறை என்று சொல்ல எதுவுமே இல்லை. பிள்ளைகள் அருகில் இல்லை என்ற பெரிய குறையை தவிர.




மங்களம் பிள்ளைகள் வருகிறார்கள் எனும் போது இருக்கும் உற்சாகம் , அவர்கள் திருப்பி ஊருக்கு போகிறார்கள் எனும் போது அப்படியே ஊசி குத்திய பலூன் போல வாடிப்போவதை பிள்ளைகள் அவதானிக்க தவறியது இல்லை. “ அம்மா வெளிநாடு வந்து விட்டால் , இந்த விதமான பிரிவுகளும் , கஷ்டங்களும் கூட உண்டு. இவற்றை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும், நீங்கள் இங்கே தனியாக இருப்பது எங்களுக்கு மட்டும் மகிழ்ச்சியாக இல்லை, நீங்கள் அங்கு வந்து அடைபட்டு இருக்க விருப்பவில்லை, ஆனால் இந்த பெரிய வீட்டில் தனியாக இருப்பதை விட வீட்டை வாடைக்கோ அல்லது விற்று விடுவது நல்லது, நீங்கள் ஹோமில் இருந்தால் பயமில்லாமல் நாங்கள் இருப்போம் என்று, மகள் சொன்ன போது மங்களம் முற்றாக மறுத்து விட்டாள் . ஜூனோவின் உதவி இருக்கும் வரை தன்னால் வீட்டில் இருக்க முடியும் என்று நம்பியது தான் உண்மை.




மங்களம் ஒன்றும் படுக்கையில் இல்லை என்ன முதுமை என்ற பயத்தை தவிர, தன் தேவைகளை தானே செய்து கொள்ளக் கூடியவள் மங்களம் . ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. தேவையான அளவு

பணம் இருந்தாலும், உதவிக்கு யாரோ ஒருவர் தேவையாக இருந்தது. அதுவும் நம்பிக்கையான ஒரு பெண் , தன் தோழிகள் உதவியுடன் , வீட்டுக்கு ஜூனோ வந்தாள் . அவள் ஒரு பிலிப்பின் நாட்டை சேர்ந்தவள். ஜூனோ மங்களத்துக்கு தேவையான எல்லா உதவிகளையும் அன்பாக அக்கறையாக செய்தாள் . காலை எட்டு மணிக்கு வந்து மாலை 5 மணிக்கு போய் விடுவாள். இடையில் அவளோடு ஷாப்பிங் , டாக்டர் , வெளியே எங்கே போவது என்றாலும் கூட்டி போவது ஜூனோவை தான்.

சமையலுக்கும் உதவி செய்வாள். வாஷிங் மெஷினில் துணிகளை போட்டு துவைத்து கொடுப்பாள்.

பொருட்கள் எல்லாவற்றையும் அழகாக சுத்தம் செய்து பளபளப்பாக வைப்பாள்.




மங்களத்துக்கு ஜூனோவை பிடித்து போனது. அவளை பற்றி விசாரித்ததில் அவளின் கணவர் காய்ச்சல் என்று படுத்தவர் எழவே இல்லை. மூன்று பெண் குழந்தைகள் உடன் இந்த கனடாவில் வசிக்கிறார்கள் .

ஜூனோவுக்கு 45 வயது இருக்கும் அவள் மூத்த குழந்தைக்கு 15 வயது. மனதில் ஒரு இரக்கம் குடிகொள்ளவே மங்களம் பார்த்தும் பாராமல் கொஞ்சம் அதிகமாகவே சம்பளம் கொடுத்தாள் .




பிள்ளைகள் எல்லோரும் பழைய கதைகளை பேசி சிரித்து கொண்டு இருக்க மங்களம் , கையில் இருந்த பூங்கொத்தை பக்கத்தில் வைத்து விட்டு , அதுசரி, “ஜூனோவுக்கு பூங்கொத்து கொண்டு வரவில்லையா” என்று பிள்ளைகளை பார்த்துக்கேட்டாள்.




“அம்மா ஜூனோவுக்கு அவவின் பிள்ளைகள் வாங்கி கொடுப்பார்கள் தானே “என்றாள் மேகலா .




“அது என்னவோ உண்மைதான், ஆனால் என்னை அன்பாக இருந்து பார்க்கும் ஜூனோவும் ஒரு தாய் தான் , அதனால் அவளுக்கும் ஒன்று வேண்டும் என்றவள், தன் கையடக்க தொலைபேசியை எடுத்து , இரண்டு பூங்கொத்துகளை ஆர்டர் கொடுத்தாள் ஹோம் டெலிவெரி , செய்ய சொல்லி. ஒன்று ஜூனோவுக்கும், மற்றது மேகலாவுக்கு. மகள் அம்மாவை ஆச்சரியமாக பார்த்தாள் . அம்மா மாறவே இல்லை.





அந்த மூன்று நாளும் ஓடி போனது தெரியவே இல்லை மங்களத்துக்கு , ஜூனோ உதவியுடன் மேகலாவும் சேர்ந்து சமைத்து , சிறப்பாக மதர்ஸ் டே கொண்டாடி விட்டு எல்லோரும் புறப்பட்டார்கள்.

மங்களம் கலங்கிட துடித்த விழிகளை அடக்கி கொண்டாள் .




குழந்தைகள் வளர வேண்டும் நினைப்பார்கள் பெற்றோர்கள், பிள்ளைகள் வளர்ந்து வேலை , கல்யாணம் என்று ஆளுக்கு ஒரு திக்கு போனதும் , அந்த பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக காத்திருப்பது தான் வாழக்கை என்று ஆகி விட்டது.




அன்று மங்களத்துக்கு உடம்புக்கு முடியாமல் கட்டிலை விட்டு எழ முடியாமல் அப்படியே கிடந்தாள் , ஜூனோ தான் ஆம்புலன்ஸ் கால் பண்ணி கொண்டு போய் , அது பிரஷர் , வேறு ஒன்றும் இல்லை என்று

வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் ஜூனோவுக்கு தான் வீட்டுக்கு போக முடியாமல் யோசித்து கொண்டு நின்றாள். மங்களம் “ ஜூனோ நீ வீட்டுக்கு போக உன் பெண் குழந்தைகள் அவர்களை பார், நான் வயதான பெண், என்னை பற்றி யோசிக்கவே தேவையில்லை. என்று கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தாள் . வீட்டுக்கு போன ஜூனோ ஒரு மணி நேரத்தில் மகள் லிசா உடன் வந்தாள் . “மாம் , என் மகள் லிசா உங்களுக்கு துணையாக இருப்பாள் இன்று இரவு, அங்கு படுத்தால் என்ன இங்கு படுத்தால் என்ன உறங்க தானே போறாள்” என்று மகளை இறக்கி விட்டு போய் கொண்டு இருந்தாள் ஜூனோ.




15 வயதே நிரம்பிய லிசா பொறுப்பாக அடிக்கடி வந்து எட்டி பார்த்தாள் , கிராண்ட் மா , ஏதும் வேண்டும் என்றால் கேளுங்கள், இந்த சோபாவில் தான் படுத்து இருக்கிறேன் என்று , அக்கறையாக பார்த்து கொண்ட அந்த சிறுமியை பார்த்த போது மகளின் ஞாபகம் வர கண்ணில் நீர்கள் தளும்பியது.

மேகலா போலவே இவளும் பொறுப்பாக இருப்பது ஆச்சரியம் கொடுத்தது. பெற்றவர்களை பிள்ளைகள் பார்த்துக் கொள்வது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் அடுத்தவரையும் அக்கறையோடு பார்த்துக்கொள்ளும் பண்பு சிறப்பு.




மேகலா, வசந்த், வினோத் ஆள் மாறி ஆள் போனிலும், பேஸ் டைமிலும் தொடர்பு கொண்டு அக்கறையாக விசாரித்து கொண்டார்கள். ஜூனோ பொறுப்பாக பார்க்கிறாளா என்று அம்மாவிடம் கேட்டுக் கொண்ட போதும் மங்களம் எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை , ஜூனோ பற்றி மட்டும்.




ஜூனோ இரவு பகல் என்று பார்க்காமல் தான் இல்லையென்றால் மகள் என்று சிரத்தையோடு பாராமரித்து கொண்டு இருந்தாள் . மங்களம் ஜூனோ குழந்தைகள் மீது அளவற்ற பாசம் கொண்டு இருந்தாள் . கிராண்ட் மா , என்று ஓடி வந்து அக்கறையோடு ஒட்டிக்கொண்டார்கள்.




இனம் மொழி, பேதம் எல்லாம் மறந்து போனாள் மங்களம். நாட்கள் ஓடிக்கொண்டு இருந்தன , மங்களத்தால் முன்னர் போல தன் வேலைகளை கவனித்து கொள்ள முடியவில்லை. சோர்ந்து, களைப்பு அவளை அப்படியே கதிரையில் அமர்ந்து விடுவாள். ஓடியாடி எதையும் செய்ய முடிவது இல்லை. இதற்கு இடையில் பிள்ளைகளும் வந்து பார்த்து மருந்துகள் கொடுத்து , அக்கறையாக வேண்டியவற்றை செய்து விட்டு போனார்கள். அப்பப்ப ஜூனோவை கூட விசாரித்து கொண்டார்கள்.




அன்று மூச்சு விட சிரம பட்ட மங்களதை பார்த்த ஜூனோ அவசர தொடர்புகளுக்கு 911 அடித்து அழைத்து அவர்கள் வரும் போது மங்களத்தின் உயிர் பிரிந்து இருந்தது. ஜூனோ தன்னை மறந்து கண்ணில் வடியும் கண்ணீரை கட்டுப்படுத்த முயன்று கொண்டு நின்றாள்.




பிள்ளைகள் எல்லோரும் அவசரமாக விமானங்களை பிடித்து வந்து சேர்ந்தார்கள். வந்து ஈமைக்கிரிகைகள் எல்லாம் முறைப்படி சிறப்பாக செய்தார்கள். எல்லாம் முடிந்து வீடு வந்து சேரவும் ,

அவர்களின் குடும்ப லோயர் இவர்களுக்காக காத்திருந்தார். வந்தவர் பிள்ளைகளுடன் பேசி விட்டு

ஒரு கடிதத்தை எடுத்து கொடுத்தார் அது மங்களத்தின் கை பட எழுதிய கடிதம்.




அன்பான என் மூன்று பிள்ளைகளுக்கும்.

அப்பா சேர்த்த சொத்து பணம் எல்லாம் விபரங்களும் இதில் எழுதி இருக்கிறேன். எல்லாவற்றையும் நீங்கள் மூவரும் சமமாக பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இருக்கும் இரண்டு வீட்டையும் விற்று மூன்றாக பிரித்து எடுங்கள்.




வெளிநாடு வந்தால் வெள்ளையர்கள் போல பலவற்றை கற்றுக்கொள்கிறோம். வாழ்வும் பழகி கொள்கிறோம். ஆனால் சொத்து சேர்ப்பதிலும் அவற்றை கடைசி காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு போய் சேர வேண்டும் என்பதில் மட்டும் நாங்கள் மாறுவதில்லை.




நான் இந்த விடயத்திலும் மாற வேண்டும் என்று சுயமாக சிந்தித்தேன். அதனால் தான் என்னை அன்போடும் அக்கறையோடும் கவனித்த ஜூனோவுக்கும், பிள்ளைகளும் இந்த வீட்டை அன்பளிப்பாக கொடுக்கிறேன். இதை நீங்கள் எல்லோரும் மனப்பூர்வாமாக ஏற்றுக் கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்.




எனக்கு தெரியும் இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். இதன் பெறுமதி அதிகம் என்பது. நான் வாழ்ந்த வீடு என்பதை விட என்னை தாயை போல பார்த்துக்கொண்ட ஜூனோ, என்னை கிராண்ட் மா என்று பாசமாக கொண்டாடிய அந்த குழந்தைகள் என் மீது வைத்த அன்பு பொய்யல்ல . அவர்கள் ஒன்றும் என்னை மயக்கி, ஏமாற்றி எதுவும் செய்யவில்லை, நான் சுயநினைவோடு தான் எழுதினேன் ,




இப்படிக்கு

அம்மா மங்களம் .




பிள்ளைகள் அப்படியே திகைத்து போய் நின்றார்கள், ஜூனோவும் குழந்தைகளும் தான். அன்புக்கு முன்னால் இனம் மதம், நிறம் எல்லாமே ஒன்றுமே இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்