நேசிப்பு



நேசிப்பது என்பது முடிவாகிய பின்னர், என்ன என்பது கேள்வியே அல்ல. அது ஒவ்வொன்றும் ஒவ்வொருவர் விருப்பம், குடும்பத்தை, குழந்தைகளை, நட்பை, காதலை, கடவுளை, இயற்கையை, உயிர்களை , நற்பணிகளை இப்படி நிறைய இருக்கிறது நேசிப்புக்கான வழிகள் . இந்த நேசிப்புகள் மனிதருக்கு ஆத்ம திருப்தியை தருவதாக இருக்க வேண்டும் மாறாக அது எங்களுக்கு மனயழுத்தை கொடுப்பதாக இருக்க கூடாது.ஒவ்வொருவரின் எல்லையும் எண்ணங்களும் அதன் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகிறது அல்லது வேறுபடுகிறது என்பதே உண்மை.




அந்த பெண்ணின் பெயர் டோனா , நான் முதன்முதலில் அந்த பெண்மணியை சந்தித்தது, நமது சுற்றாடல் ஒன்று கூடலில். எனது பக்கத்து வீட்டில் தான் அவ இருக்கிறா, சில வருடங்களுக்கு முன் வந்த போது அறிமுகம் செய்து கொண்டோம். அவர் மனநல ஆலோசகராக பணிபுரிகிறார். அவர் பேசிக்கொண்டு இருந்த போது , அவரின் தொழிலை சொன்னதும் நான் கொஞ்சம் excited ஆகி விட்டேன். எனக்கு அதை பற்றி அறிய , தெரிந்து கொள்ள, ஆர்வம் நிறையவே இருந்தது உண்மை. ஆனால் பேசிக்கொண்டு போன போது , தனக்கு தெரிந்த ஒரு நண்பர் 40 வயது , நீச்சல் குளத்தில் விழுந்து அடிபட்டதால் இப்போ அவர் நிரந்தர படுக்கையில் என்று சொல்லி விட்டு, இந்த வாழ்வை நினைத்தால் தனக்கு பயமாக இருக்கிறது என்றும் தனக்கு முதுமையை நினைத்து சரியான பயமாக இருக்கிறது என்று பேச தொடங்கினார். முடிவில் நான் ஆலோசகர் போல அறிவுரைகளை சொன்னேன், எதுவும் நம் கையில் இல்லை, இல்லாத ஒன்றை நினைத்து பயப்பட தேவையில்லை. வரும் போது சந்தித்து கொள்ளலாம். அதை நினைத்து நம் கையில் இருக்கும் வாழ்க்கையை இழந்து விட கூடாது. மகிழ்ச்சியாக இருப்போம். என் பேச்சு டோனாவுக்கு பிடிச்சு போனதும். உண்மைதான். நன்றி, நன்றி சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி என்று சொல்லி விட்டு போனார்.




அவரின் பொழுது போக்கு , ஆர்வம், விருப்பம், பணி எல்லாமே இயற்கையோடு சம்பந்த பட்டு இருந்தது. மற்றவர்களை பொறுத்தவரை , அவரின் வீட்டையும் அதை சுற்றி இருந்த செடி கொடிகளை எல்லாம் பார்க்கும் போது , அது காடாக , வெறும் பத்தையாக , சோலையாக , பாழடைந்த தோட்டமாக எப்படி வேண்டுமாலும் தெரியலாம், அது அவரவர் கண்ணோட்டத்தை , பொறுத்தது. பார்த்தவர்கள் சொல்லுவார்கள், இதற்குள் ரக்கூன் குடியிருக்கோ தெரியாது என்று, ஆனால் டோனாவுடன் பழகிய எங்களுக்கு தெரியும், அவ இந்த இயற்கை, கொடிகளை, செடிகளை , மரங்களை எல்லாம் எவ்வளவு நேசிக்கிறா என்று. வேலை நேரம் தவிர்ந்த மற்றைய எல்லா பொழுதிலும் அந்த பின் வளவு தோட்டத்தில் நிலத்தை தோண்டி நடுவதும் , தண்ணீர் பாய்ச்சுவதும், உரம் போடுவதும், காய்ந்த இலைகளை கத்தரித்து சேமித்து உரமாக்குவதும், கொடிகளை படர அதற்கு ஊன்றுகோலாக கிளைகளை, கம்பிகளை குத்தி வைப்பதும். மரங்கள் அருகே நின்று அதன் வளர்ச்சியை பார்த்து பூரித்து மகிழ்வதும், அவற்றில் வரும் பழங்களை பறித்து அவற்றை பதப்படுத்துவதும், என்னையும் சொல்லுவா, இதில் உண்டாகும் பழங்கள் எல்லாம் உங்கள் வளவுக்குள் இருக்கு, இங்கேயும் இருக்கு பிடுங்கி எடுத்துக் கொள் என்று. நான் பிடுங்கவில்லை என்றதும் , தானே பழங்களை பிடுங்கிக் கொண்டு வந்து தருவா டோனா.




அந்த இயற்கையை நேசிக்க தெரிந்த டோனா ஒரு மரத்தையோ, செடியையோ வெட்ட பிரியப்படுவது இல்லை காரணம் “ஒரு செடியை, கோடியை, மரத்தை வெட்டும் போது ஒரு உயிரை கொல்வது போல தான் உணர்கிறேன், அதனால் நான் வெட்ட விரும்புவது இல்லை” என்று சொல்லுவது வழக்கம் . அப்படி மரங்களை நேர்த்தியாக, மிக ஒழுங்காக ட்ரிம் பண்ணும் போது அந்த இலைகளை எல்லாம் கூட்டி அள்ளி மறுசுழற்சிக்கான ஒதுக்க பட்ட தொட்டிக்குள் போடுவதும், சில மரங்கள் அப்படியே பத்தையாகி விட்டால் அவற்றை மண்ணோடு சேர்த்து இன்னும் சேர்த்து பக்குவமாக அதை சுற்றி கட்டி , இதை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என எழுதி ஒட்டி , மிக பக்குவமாக வைத்து விட்டு கண்காணித்து கொண்டு இருக்கும் டோனாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அந்த இயற்கையின் மீது உள்ள காதலும், அந்த கொடி செடிகளை உயிராக நேசிக்கும் நல்லெண்ணமும், நேசத்தின் மற்றொரு பரிமாணத்தின் பரிபூரண அழகு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்