கொழுப்பில் நாங்கள் சிறுவர்களாக இருந்த போது , மஹாபாகே என்ற இடத்தில் ஒரு வாடகை வீட்டில் இருந்தோம். அந்த வீட்டின் சொந்த காரருக்கு ஒரு மகன், ஒரு மகள் , மகன் திருமணம் செய்து நாங்கள் இருந்த முன் வீட்டில் மனைவி மகளுடன் இருந்தார், அவரின் மகள் பெயர் விசாகா அவள் கூட தான் நாங்கள் விளையாடுவோம், அதோடு நந்தி வீட்டுக்கு போய் கரம் , கிரிக்கெட் , கிட்டி என்று விளையாடுவோம். எங்கள் வீட்டு சொந்தக்காரனின் மகளை நந்தி என்று தான் கூப்பிடுவேன், அது சிங்களத்தில் மாமி என்று பொருள் படும், என் கூட நந்தியின் அண்ணா மகள் நெருங்கிய தோழி . அதனால் அவள் அழைப்பது போல நாங்களும் நந்தி என்று அழைத்து பழகி விட்டது. நந்தி கொஞ்சம் குட்டையான, நிறம் குறைந்தவர் , கல்யாண வயதை கொஞ்சம் தாண்டியவர், பேசி வரும் சம்பந்தங்கள் எல்லாம் அவரை பார்ப்பது குறைவு, அவர் பெயரில் இருக்கும் சொத்தில் தான் கண். கண்ணுக்கு லட்சணமாக நந்தி இருக்கவில்லை, ஆனால் பழகுவதற்கு மிகவும் இனியவர். அன்பானவர், பண்பானவர்.
நாங்கள் நந்தி உடன் நெருங்கி பழகியதால் எங்களுக்கும் அவ நெருங்கிய உறவாகி போய் விட்டார். நாங்கள் கரம் விளையாடும் போது எங்களிடம் தன் எண்ணத்தை பகிர்ந்து கொள்வார் . எங்களுக்கு அந்தளவு அந்த வயதில் புரியாவிட்டால் கூட , தன்னை பார்க்க வருகிறார்கள், என்று சொல்லி வருத்தப்படுவா. நந்தி மிகவும் பணக்காரி, கார், கறுவா தோட்டம், தென்னம் தோப்பு , வயல், அன்னாசி தோட்டம், என்று நிறையவே சொத்தும், பணமும் இருந்தது. நாங்கள் அங்கு உள்ள இடங்கள் எல்லாம் போய் வந்து எங்களுக்கு எல்லாம் அத்துப்படி , நாங்களும் விசாகாவும் சுற்றாத இடம் இல்லை. அவர்களுக்கு எடுபிடி வேலை செய்ய என்று பத்து பதினைந்து பேர். பெரிதாக நந்திக்கு தோழிகள் கிடையாது காரணம் பணக்காரி. பெற்றோர்கள் யாரோடும் பெரிதாக சேர்வதற்கு விடுவதும் இல்லை, அண்ணன் குடும்பமும், நாங்களும் தான் நந்தியின் உறவு, தோழி, நட்பு எல்லாமே.
பல திருமணங்கள் வந்து போயின , ஆனால் எதுவும் கைகூடவில்லை, என்ன காரணம் என்று தெரியவில்லை. அழகு இல்லை என்பது தான் காரணம் என்று பேசிக்கொண்டார்கள். எங்களுக்கு தெரிய நந்தி பெரிய அழகியாக இருந்தார். அன்றும் பெண் பார்க்க என்று இரண்டு கார் நிறைய ஆட்கள் வந்தார்கள். நாங்கள் வீட்டு வாசலில் இருந்து புத்தகம் வாசித்து கொண்டு இருந்தேன், தங்கைகளுக்கு அம்மா பாடம் சொல்லி கொடுத்துக்கொண்டு இருந்தார்.அண்ணா உள்ளே படித்து கொண்டு இருந்தார்.
எங்கள் வீட்டு பக்கம் யாரோ பேசிக்கொண்டு வருவது கேட்டது திரும்பி பார்த்தேன், நாளைந்து பேர் அதில் இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள், மாப்பிள்ளையும் சகோதரியும் போல இருந்திருக்க வேண்டும். சரியாக சொல்ல தெரியவில்லை, மாப்பிள்ளைக்கு ஐந்து சகோதரிகள் என்று சொன்னதாக நினைவு. காணி வீடு, வளவு, எல்லாம் சுற்றி சுற்றி பார்த்தார்கள். எதோ பொருளை வாங்க வந்தவர்கள் போல, எனக்கு அது பிடிக்கவில்லை, அம்மாவிடம் ஓடி போய் அம்மா இவர்கள் நந்தியை பார்க்க வந்தார்களா, இந்த காணி வீடு வாங்க வந்தார்களா" என்றேன் . என்னுள் இனம்புரியாத கோபம். அம்மா என்னை "வாயை மூடிக்கொண்டு இரு " என்று அடக்கி விட்டார். எனக்கு நந்தி இவரை கல்யாணம் செய்ய கூடாது என்று கடவுளை வேண்டிக்கொண்டேன், இருந்தால் காப்பாற்ற வேண்டும் நந்தியை என்று.
என் வேண்டுதல் பலிக்கவே இல்லை. நந்திக்கு கல்யாணம் ஆகி விட்டது. நந்தி மாப்பிள்ளை வீட்டுக்கு திருமணம் முடிந்து போகும் போது எங்களை எல்லாம் கட்டி பிடித்து அழுதா, இனிமேல் அடிக்கடி பார்க்க முடியாது என்றும் சொன்னா . கண்ணீரோடு வழி அனுப்பி வைத்தோம்.
சில நாட்களில் கொஞ்சம் தள்ளி வீடு கட்டிக்கொண்டு நாங்களும் போய் விட்டோம். விசாகா உடன் மட்டுமே தொடர்பு இருந்தது. நந்தியை காண முடியவில்லை, ஒரு வருடத்தின் பின் நந்தி வந்திருப்பதாக சொல்லி போய் பார்த்தோம். தனக்கு குழந்தை பிறக்க போவதாகவும் இங்கு தான் இருக்க போவதாகவும், வாகன வசதிகள் வீட்டில் இருப்பதால் கணவர் அனுப்பி வைத்ததாகவும் சொன்னார்.
சொல்லி சில மாதங்களில் குழந்தை பிறந்தது. இனிமேல் நந்தி கணவர் வீடு போக மாட்டார் என்றும், அவர்கள் இடையே சொத்து கேட்டு கணவர் பிரச்சனை என்று பேச்சுகள் கசிய தொடங்கின. நந்தி தன் ஆண் குழந்தையை வளர்த்துக்கொண்டு பெற்றோர் உடன் வாழ தொடங்கினார். இந்த இடைக்காலத்தில் அம்மா, அப்பா எல்லோரும் இறந்து போனார்கள். நந்தியின் மகனுக்கு மூன்று வயது
தீடீரென ஒருநாள் நந்தியின் குழந்தைக்கு ஜுரம் அதிகமாக , மகனுக்கு வலிப்பு கண்டது. மகனை கொண்டு போக கார் வசதி இருந்தும் சாரதி இருக்கவில்லை, குழந்தையை தூக்கி தோளில் போட்டுகொண்டு நந்தி செருப்பும் போடாமல் , ஒரு கோடீஸ்வரனின் மகள் , பஸ் போக்குவரத்து உள்ள வீதிக்கு ஓடினா, குறைந்தது 10 நிமிடம் நடை தூரம் . பெற்ற குழந்தையாக இருந்தாலும் மூன்று வயது மகன் கனக்கவே செய்தான், தாய்மைக்கு மட்டுமே உள்ள பலம் நந்தி ஓடிக்கொண்டு இருந்தார் குழந்தையை தூக்கிக்கொண்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு, அவ எதையும் திருப்பி பார்க்கும் மனநிலையில் இல்லை , அந்த பஸ்சில் நான் ஸ்டேஷக்கு போய் கொண்டு இருந்தேன் என் அண்ணாவுடன். ஓடிய நந்தியை கண்ட பஸ் ஓட்டுனர், பக்கத்தில் நிறுத்தி என்ன பிரச்சனை என்று கேட்டு நந்தியுடன் குழந்தையை ஏற்றி கொண்டார், நந்தியை அந்த கோலத்தில் கண்ட நான் கலங்கி போய் விட்டேன். வாழ்வில் வசதிகளை பார்த்து கல்யாணம் செய்யும் இந்த ஆண்கள் சபிக்க பட வேண்டியவர்கள், ஒரு பெண்ணுக்கு வாழ்வில் கஷ்டம் கொடுக்கும் எந்த ஆணும் மன்னிக்க பட கூடாதவர்கள். வசதியும் , ஆஸ்தியும், ராணி போல வாழ்ந்த நந்தி தன் குழந்தைக்காக ஓடியது இன்றுவரை அழியாமல், என் மனதில் அன்பு தாயாக உயர்ந்து நிற்கிறார் .
கருத்துகள்
கருத்துரையிடுக