இரவு ஒரு மணி இருக்கும், நவரச என்ற சில எபிசொட்களை நெட்ப்பிலிக்ஸில் படம் பார்த்து விட்டு, கதவுகள் எல்லாம் சரியாக பூட்ட பட்டு இருக்கா , அலாம் எல்லாம் ஓன் பண்ணியாச்சா என்று கீழே இறங்கி போய் பார்த்தேன், அதுவும் பிரான்சில் தாய், மகள் என்று கொள்ளை அடிக்க போன இடத்தில் கொலை எல்லாம் வாசித்தேனா அதன் தாக்கம் வேற. எல்லாம் சரி பார்த்துக்கொண்டு மேலே வந்த நான் மெதுவாக யன்னல் வழியாக எட்டி பார்த்தேன். அங்கே ஒரு உருவம் மெதுவாக எங்கள் கேட்டை தாண்டி நின்று கொண்டு இருந்தது. கருப்பு பாண்ட்ஸ் , கருப்பு நிற ஹூடி தலையை சேர்த்து மூடிக்கொண்டு இருந்தது. மெதுவாக அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தது ,கால் இருக்கா என்று ஊர்ஜித படுத்திக்கொண்டேன். எந்த வீட்டை போவது என்று யோசித்து கொண்டு இருப்பது போல இருந்தது, சரியாக எந்த வீட்டினுள் நுழைவது என்று தீர்மானிக்காத மாதிரியும் இருந்தது. ஒரு டாக்ஸி வந்து யாரையோ இறக்கி விட அந்த உருவம் தெருவோரத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து கொண்டது மட்டுமில்லாமல் மெதுவாக எங்கள் வீட்டின் மேல் மாடி யன்னலை பார்த்தது, யாரவது பார்க்கிறார்களா என்று ,லேசாக ஒரு சின்ன வெளிச்சம், ஒளி என் பிள்ளையாரிடம் வைத்த லைட் மூலம் வெளியே தெரிந்திருக்க வேண்டும்.
டாக்ஸியில் வந்த நபர் , எதிரே உள்ள வீட்டினுள் சென்று கதவை திறந்து மறையும் வரை பார்த்துக்கொண்டு இருந்த உருவம், லேசாக வெளியே வந்தது, கால்கள் இருக்கா என்று ஊண்டி கவனித்தேன், ஷூ போட்ட மாதிரி தான் இருந்தது. கையையில் நேரத்தை பார்த்த தொனி யாருக்கோ காத்திருப்பது போல தோன்றியது, நிச்சயமாக இங்கே ஒரு களவு அல்லது கொள்ளை நடக்க போகிறது என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது , எதற்கு இவர் டாக்ஸியை கண்டதும் ஒளிய வேண்டும், தவறான எண்ணம் இல்லை என்றால். இதை எப்படியாவது தடுக்க வேண்டும், என்ன 911 அவசர இலக்கத்துக்கு அடித்து அழைப்பு செய்தால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிப்பதற்குள் திருடனோ , எவனோ உள்ளே புகுந்து ஒரு வழி பண்ணி விட்டு போய் விடுவார்கள்.
சரி என்று என் கணவரை எழுப்பி சொன்னால் அவர் போடும் ஆர்ப்பாட்டத்தை விட திருடன் கையால் செத்து போகலாம், தானும் பயந்து, திருடனையும் பயமுறுத்தி , ஒரு குத்து டான்ஸ் அரங்கேறி விடும், இதற்கு ஒரே வழி நாம தான் எதாவது பண்ணி அவர்களை ஓட பண்ணி விட வேண்டும் நாங்கள் அல்டேர்ட் ஆக இருக்கிறோம் என்று தெரிய படுத்த வேண்டும் என்று எண்ணி கொண்டு இருக்கிற சின்ன மூளையை போட்டு கசக்காமல் யோசித்தேன்.
நான் யோசித்து கொண்டு இருக்கையில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது, அதில் இதே மாதிரி கொஞ்சம் உயரமான மெல்லிய உருவம் வரவும், இந்த உருவம் கை கொடுத்த வரவேற்றது, "வா தொழிலை தொடங்குவோம் "என்பது போல. அவர்கள் திருப்பி சுற்றும் முற்றும் பார்க்கவும் எனக்குள் ஒரு எண்ணம் பட பட என்று சமையல் அறை பக்கம் ஓடிச்சென்று கதவை திறந்தேன், அலாம் போட்டு இருந்ததால், அது சைரன் போல தொடர்ந்து அடிக்க தொடங்கி விட்டது , அந்த சத்தம் கேட்ட கணவன் திருடனை விட மோசமாக எழுப்பி ஓடி வந்தார், நான் யன்னலால் எட்டி பார்த்து கொண்டு நிற்பதை பார்த்ததும் , அங்கே என்ன புதினம் ஏன் அலாம் அடிக்குது என்ற படி வந்தார், அந்த இரண்டு உருவமும் மோட்டார் சைக்கிளில் ஏறி ஓடிக்கொண்டு இருந்தார்கள். அதற்கு இடையில் அலாம் கம்பெனி எங்களுக்கு தொலை பேசி அழைப்பு செய்து இருந்தது, நாங்கள் ஓகேயா என்று , அது ஒன்றும் இல்லை, என் மனைவி தான் தூக்கத்தில் போய் கதவை திறந்து விட்டா " என்று இவர் பதிலளித்து கொண்டு இருந்தார் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்