ஞானம்
ஞானம் என்றால் என்ன? எங்களை நாங்கள் பக்குவப்படுத்திக் கொள்வது, எங்களை நாங்கள் நாங்கள் பக்குவப்படுத்தி கொள்வதன் நோக்கம் என்ன.யாரையும் நாங்கள் காயப்படுத்த கூடாது, யாருடைய தப்பையும் பெரிசு படுத்த கூடாது . அவற்றை எல்லாம் இது வாழ்வில் கடந்து போக வேண்டிய நிகழ்வுகள் என்று எண்ணும் எண்ணத்தை வளர்த்துக் கொள்வது . எங்களை நாங்கள் நேர் வழிகாட்டலில் கொண்டு செல்வது, வாழ்வில் எதிர்பார்ப்புகளை எதிர்பார்க்காமல் வாழ கற்றுக்கொள்வது. எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றத்தை கொடுக்கும், அந்த ஏமாற்றம் தான் வலியை கொடுக்கும் , அந்த வலிகள் வராமல் இருக்க வழியை தேடிக்கொள்வது தான் இந்த பக்குவ படுத்திக்கொள்ளல் .
இவ்வுலகில் யாரையும் நாம் திருத்த முடியாது, யாரையுமே நாங்கள் சிருஷ்டிக்க இல்லை. அது கடவுளாலே முடியாத போது . நாம் பெற்ற குழந்தைகளையே கட்டுப்படுத்த முடியாது, அதுவே வாழ்வின் நிதர்சனம். நாம் எம்மை திருத்திக்கொள்வது , எம்மை நாம் மாற்றி அமைப்பது , எம்மை நாம் பக்குவ படுத்தி கொள்வது எல்லாம் ஞானம். உலகில் யாரையும் திருத்த ஞானம் முக்கியம் அல்ல, இந்த சிக்கல் நிறைந்த உலகில், சிக்கலே இல்லாமல் வாழ பழகுவது தான் ஞானம். எரிச்சல் , கோபம், பொறாமை, பேராசை எல்லாம் கடந்து இன்பமும் துன்பமும் சமமென கொள்ளுதல் கூட ஞானம் தான்.
எல்லா துன்பத்துக்கு காரணம் ஆசை தான், பற்று தான். ஆனால் அவை எல்லாம் இருந்தாலும் அவற்றை பக்குவமாக கையாள கற்றுக்கொள்வது என்பதே பெரிய சாதனை, அவற்றின் ஊடே, மழை தூவானத்தின் நூடாக நனையாமல் போவது எப்படி சிரமமான செயலோ , அப்படித்தான் பற்றுகளோடு நாம் துன்பமின்றி வாழ்வது. அப்படி வாழ முடிந்தால் அதுவே வெற்றி.
எங்கள் தேவைகளை, எங்கள் கனவுகளை , எங்கள் பற்றுகளை குறைத்து கொண்டாலே பாதி துன்பம் கலைந்து விடும், ஆனால் எங்கள் எண்ணங்களுக்கு அணை போட்டாலே பாதி துன்பம் குறைந்து விடும்.
தேடிக்கொண்டு இருப்பதே ஞானம், அது யாருக்குமே கிடைத்து விடுவது இல்லை, கிடைத்து விட்டது போல அமைதியாகி விடுகிறார்கள் இறுதியில். அதெல்லாம் தேடியா கிடைக்க போகிறது , இந்த பிரபஞ்ச ரகசியம் , கருந்துளை போன்றது , தேடி கிடைக்கவா போகிறது. ஆனால் தேட புறப்பட்டால் தான் வாழ்வில் ஏதோ செய்து கொண்டு இருக்கிறோம், ஏதாவது செய்தால் தான் வாழ்கிறோம் என்று அர்த்தம். எல்லாம் நிறுத்தி விட்டால் வாழ்வே முடிந்து விட்டது என்றல்லவா அர்த்தம், வாழ்தலே ஞானம் தானே எமக்கு .
கருத்துகள்
கருத்துரையிடுக