அப்பா

ஜானு கோபமாக போய் அடித்து கதவை சாத்திக்கொண்டாள் . அவள் போன திக்கையே பார்த்துக்கொண்டு நின்றார் கந்தசாமி.
"என்னப்பா யோசிக்கிறீங்க , விடுங்கோ , நாங்கள் இந்த நாட்டுக்கு வந்தது பிழை, பிள்ளைகள் இப்படி எடுத்தெறிஞ்சு பேசுவார்கள் என்று யார் கண்டது " அம்மா சரசு அலுத்துக் கொண்டாள் .
"இல்லை சரசு, அதுக்காக நான் வருத்த படவில்லை. ஜானு என்ன சொன்னாலும் எல்லாத்தையும் தாங்கி அவளை கரை சேர பண்ணி விட வேண்டும், அதுதான் எங்கள் கடமை, அவளை தன் சொந்தக்காலில் நிற்க பண்ண வேண்டும் , அது ஒன்று தான் என் ஆசை " என்றார் கந்தசாமி .
நந்தன் அவன் தான் கந்தசாமி சரசு தம்பதிகளின் முத்த மகன், அவன் ஏஜென்ட் மூலம் களவாக கனடா வந்து, அகதியாக இருந்து , பெற்றோரையும் தங்கை ஜானுவையும் இங்கே ஸ்பான்ஸர் பண்ணி அழைத்து இருந்தான், வந்த பெற்றோர்களும் சும்மா இருக்கவில்லை, கடுமையாக இரவு பகல் பார்க்காமல் உழைத்தார்கள், கிளீனிங், கேட்டரிங் , டிஷ் வாஷிங் என்று ஓடி ஓடி உழைத்து இந்த அழகான வீட்டை, டொரொன்றோ மாநகரத்தில் வாங்கி விட்டு இருந்தார்கள்.
ஜானு வளரும் போது கொஞ்சம் வசதியும் சேர்ந்து கொண்டது மட்டுமில்லை. ஜானு அழகியாக மட்டுமில்லை பேரழகியாக வேற இருந்தாளா ?
கண்ணாடியின் முன் நிற்கும் ஒவ்வொரு தருணமும் ஜானு தன் அழகினால் தற்பெருமை கொண்டாள் . அவளால் ஒன்றும் மட்டுமே ஜீரணிக்க முடியவில்லை, அவளின் பெற்றோர் தான் அது, அந்த கருப்பு நிறம், அழகு என்று சொல்லி கொள்ள எதுவுமே இல்லை போல , தன் பெற்றோர் என்று, யாருக்கும் அவளால் அறிமுகம் செய்து வைக்க முடியாத அளவுக்கு அவமானமாக நினைத்தாள் .
" சும்மா ஆட்களுக்கு முன்னால் வந்து நீஙக அப்பா , அம்மா என்று காட்ட நினைச்சால் வீட்டை விட்டு ஓடி போய்டுவேன் , "
" என் DNA யை ஒருக்கா டெஸ்ட் பண்ணி பார்க்க வேண்டும், நான் உங்களின் பிள்ளை தானா என்று " ஜானு பொரிஞ்சு தள்ளினாள்.
கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் எப்படி நான் உங்கள் மகள் என்று நினைப்பீங்க , அண்ணாவை பாருங்கோ உங்கட நிறம், அம்மாவின் நிறம், நான் எப்படி இந்த குடும்பத்தில் பிறந்தேனோ " கோபமாக back pack யை தோளில் மாட்டிக்கொண்டு நடந்தாள் .உயர் வகுப்பில் படிக்கும் அவளுக்கு பெற்றோர் ஊரில் இருப்பதாக தன் சக தோழிகளை மட்டுமில்லை , முழு வகுப்பையுமே நம்ப வைத்திருந்தாள் ஜானு.
"என்னை காரில் கொண்டு வந்து ட்ரோப் பண்ணினால் , உடனேயே போய் விட வேண்டும் , தேவையில்லாமல் அதில் யாரிடமும் பேசவே கூடாது, பேசினால் நடப்பதே வேறு " என்றபடி, கார் முன் கதவை திறக்க போன கந்தசாமியை , நான் பின்னுக்கு இருக்கிறேன் என்று பின் கதவை திறந்து ஏறிக்கொண்டாள். கார் புறப்பட்டது.
ஜானு இறங்கிக்கொண்டாள் , திரும்பி கூட பார்க்காமல் போகும் திமிர் பிடித்த மகளை பாசத்துடன் பார்த்துக்கொண்டு இருந்து விட்டு புறப்பட்டார் கந்தசாமி. அவருக்கு தெரியும் தன் மகள் ஜானு, தன்னை , தன் வீட்டு கார் டிரைவர் என்று சொல்லி வைத்து இருப்பது , அவர் அறியாதது அல்ல , ஆனால் அவரும் டிரைவர் போலவே நடந்து கொள்வார். மகளை அந்த கல்லூரி வாசலில் வாகனத்தில் கொண்டு வந்து விடுவதில் ஒரு மகிழ்ச்சி.
ஜானு கல்லூரி உள்ளே நுழைய , எல்லோர் பார்வைகளும் அவள் மீதே விழுந்தது. அவளின் அந்த பெரிய விழிகள் பேசாமல் பேசும், சின்ன இதழ்கள் , வில்லை போல வளைந்த திருத்தப்பட்ட அழகான புருவங்கள் , மெல்லிய , உயரமான தோற்றம், தோளோடு அளவாக வெட்ட பட்ட கூந்தல், தலையை சிலுப்பி பார்க்கும் போது அவள் தனி அழகு. அந்த அழகில் அவள் தனி பெருமை கொண்டாள் .
உள்ளே நுழைந்தவள் லாக்கரில் சில புத்தங்களை திணித்து கொண்டு இருந்தாள் , " ஜானு , நான் நினைக்கிறேன் அது உனது வாகனம் என்று, எதிரில் வந்த வாகனத்தோடு மோதி, உன் டிரைவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். பீட்டர் சொல்லிக்கொண்டு இருந்தான்.
ஜானு தன்னை மறந்து, Oh No , he is my Dad " அப்பா " என்று கத்திக்கொண்டு திருப்பி பார்க்காமல் ஓடினாள், அவள் தோழிகளும் அவளை தொடர்ந்து ஓடினார்கள். எண்ணி பார்க்க முடியாத மாதிரி காரின் முன் பக்கம் நசுங்கி போய் இருந்தது, ஆம்புலன்ஸ் சத்தம் ஒரு பக்கத்தில் கேட்டு கொண்டு இருந்தது, போன வேகத்தில் கதவை பலம் கொண்ட மட்டில் இழுத்து திறந்து , கந்தசாமியை வெளியே எடுத்தாள் ," நெற்றியில் இருந்து பெருகும் குருதியை மறந்து "அப்பா நீங்கள் ஓகேயா" என்று கண்ணீரோடு கட்டிக்கொண்டாள் ஜானு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்