அழகானவை

காட்சி ஒன்று தான் ஆனால் என்ன ஆளுக்கு ஆள் மாறுபட்ட சிந்தனைகள் தோன்றும், கற்பனைகள் உருவாகும். அந்த சிந்தனை எண்ணம் எல்லாம் சரியாக தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை, அப்படித்தான் எனக்கு தெரிந்த மொழியில் பாஷையில் இந்த மலையை காணும் போது சிந்தனை தோன்றியது.
Squamish, Sea to sky, என்ற சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து போகும் இடங்களில் மற்றும் ஒன்றான Whistler, Blackcomb.
இங்கு வாழும் மலையும் , மலை தொடர்களும் அப்படி தான் சொல்ல தோன்றுகிறது, ஆண்டாண்டு காலமா இருக்கிறது, அது எப்போது தோன்றியது, அதற்கான வரலாறு வேண்டுமானால் சரித்திரங்கள், ஆய்வுகள் சொல்லாம், அந்த அறிவியல் அல்லது விஞ்ஞானம் . ஆனால் எனக்கு என்னவோ அந்த மலைகளையும் அதன் தொடர்களையும் காணும் போது மனதில் தோன்றியது எல்லாம், அந்த மலையில் சிவபெருமான் இருக்கிறார் என்று. அதில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம், அது அவரவருக்கு ஏற்ப எண்ணங்கள் மாறலாம்.
எதையும் காணும் போதும் அதில் நல்லவற்றை காண்பதே மனதுக்கும் சிந்தனைக்கும் சிறந்தது, குறைகள் இல்லாமல் எதுவும் இல்லை, ஒன்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த மலை வழிச்சு துடைச்சா போல இருந்தால் அது தான் அழகு சொல்லி விட முடியாது, அந்த கரடு முரடான ஏற்ற இறக்கங்கள் உடன், சீரற்ற அமைப்பை கொண்டு இருப்பதே அதன் அழகின் சூட்சுமமே.
பலநேரத்தில் குறைகளே அழகின் நிறைகள் ஆகின்றன. ஒற்றை வார்த்தையில் அழகில்லை என்று சொல்வது சரியாகாது.திருடன் என்று ஒருவனை ஒற்றை வார்த்தையில் குற்றம் சாட்டி விடுகிறோம் பலநேரத்தில் பின்னணி எங்களுக்கு தெரிவது இல்லை, அப்படியான ஒரு சந்தர்ப்பம் சூழ்நிலை எங்களுக்கு உருவாகாமல் இருப்பதே நாங்கள் அப்படி பேச காரணம்.
நாங்கள் நல்லவர்களாக இருக்க காரணம் நாங்கள் இல்லை. எங்களை சூழவுள்ள அந்த கெட்டவர்கள் தான் இந்த நல்லவர்களுக்கு காரணம். காரணமே இல்லாமல் காரியம் இல்லை. நல்லவர்கள் யாரும் தானாக உருவானது இல்லை, எங்களுக்கு பிடிக்கவில்லை, பிடிக்காத செயல்கள் , தவறுகள், குற்றங்கள் எல்லாமே எம்மை செம்மை படுத்துகின்றன. செழிமை அடைய வைக்கின்றன.
எந்த ஒரு சிறந்த பாராட்டுக்குரிய செயலுக்கும் நாம் தான் காரணம் என்று நினைக்கவே முடியாது. அதை உருவாக்கியவரும், அதை உருவாக்க காரணமாக இருந்தவர்களும் பலநேரத்தில் எம்மால் விரும்ப படாதவர்களாக இருக்கலாம், அதை நாம் பலசமயங்களில் அறிவதோ ஏன் உணர்வதோ இல்லை, நல்லவற்றுக்கான பாராட்டுகளை, நாங்களும் கூடாதவற்றை, குறைகளை அடுத்தவர் மீது இலகுவாக சூட்டி விட்டு விடை பெற்று விடுகின்றனர்.
பிள்ளைகள் படித்து நல்ல நிலமைக்கு வந்தால், சொத்து சுகம் என்று நல்ல நிலைமைக்கு வந்தால் அதற்கான பெருமையை பல நேரத்தில் ஒருவர் தான் எடுக்கொள்கின்றன. அதே பிள்ளைகள் பாடசாலையில் ஒழுங்காக படிக்காமல், பல குழப்படிகள் செய்தால் அது தாயின் வளர்ப்பு சரியில்லை என்று தந்தை முதல் தாயை குற்றம் சாட்டி விடுகின்றனர். வெற்றி என்பது தனி மனிதன் காரணமாக முடியாது.
ஒன்றை நிறைவாக காட்ட பலநேரங்களில் குறைகள் சேர்ந்து உழைக்கின்றன. எல்லாமே அழகானவை தான். ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொரு அழகை காணலாம், அந்த அழகை அழகு செய்யும் குறைகள் இன்னும் அழகானவை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்