ஒரு பழைய சேலையில் தன்னால் சுமக்க கூடிய சில உடைகள் , சில பொருட்களை போட்டு கட்டிக்கொண்டு கொண்டு பக்கத்தில் ஓட்டை பாயில் பசியால் சுருட்டு போய் படுத்து இருக்கும் இரண்டு மகள்களையும் பார்த்தாள் தங்கம்மா . மூத்தவள் 21வயது , இரண்டாவது 13 வயது , . இரண்டு நாளாக வெறும் பச்சை தண்ணீரை குடித்து குடித்து இப்ப தண்ணீரை குடிக்கவே வாந்தியாக வந்து கொண்டு இருந்தது. பசி உயிரை வாட்டி எடுத்தது , பிச்சை எடுக்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அந்த கிராமத்தில் மரியாதையை உடன் வாழந்த குடும்பம் என்ற பெயர் எடுத்தவர்கள் , ஆனால் எல்லாமே ஒரு நாள் வாழ்வை புரட்டி போட்டது .
கணவர் கடைகளுக்கு கணக்கெழுதி கொண்டு வரும் பணத்தில் மரியாதையோடு சிவனே என்று நிம்மதியாக வாழ்ந்தவர்கள் . மகன் சேது சொல்லாமல் கொள்ளாமல் பள்ளியில் இருந்து ஓடிப்போனான் , அனுப்பி வைத்த புத்தகங்களுக்கு இடையே ஒரு துண்டு கடுதாசி. “ நாட்டுக்காக போராட போராளி ஆகிறேன். அன்று உடைந்து போனார் சேதுவின் தந்தை, ஆனாலும் மனைவி , மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் கருதி , உயிர் இருந்தும் இல்லாத மாதிரி போனார், பலன் வேலையை ஒழுங்காக செய்ய முடியவில்லை, அதனால் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். ஏற்கனவே அன்றாட வாழ்வில் வாழ திக்கு முக்காடியவர்கள் , பரிதாப நிலைக்கு தள்ள பட்டார்கள் , வாழ வேண்டும் என்பதை விட பசி , மனிதனை வாழ்கிறோம் என்று எண்ண வைக்கிறது.
பக்கத்து வீட்டு ராமசாமி இரக்கப்பட்டு மரக்கறி விற்பதுக்கு உதவியாக கூட்டி சென்றார். அந்த வருமானம் குடும்பம் நடத்த போதவில்லை, தங்கம்மா , பொறுமை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து விழுந்தாள் . போனவனை நம்பி இருக்கிற இரண்டு பெட்டைச்சிகளை என்ன செய்யிறது, அதுகளை விடுங்க நாங்கள் சாப்பிடுறது இல்லையே. ஒழுங்காக வேலையை பாருங்கோ , வரும் போது அடுத்தநாள் பாட்டுக்கு கொஞ்ச காசாவது கையில் கொண்டு வாங்கோ.
சந்தையில் சில நாள் நல்ல வியாபாரம் நடக்கும் , சில நாள் எதோ போனதுக்காக ராமசாமி இரக்கப்பட்டு கொஞ்சம் கொடுத்தால் அதை வைத்து கஞ்சி என்றாலும் குடிக்கலாம் என்ற எண்ணத்தோடு தான் அன்று வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டில் தங்கம்மாவின் குரல் , கேவி கேவி அழுவது கேட்டது , கூடவே மூத்தவள் தாயின் முந்தானையை பிடித்தபடி அழுது கொண்டு நின்றாள் .வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது என்று சொல்லாமல் சொன்னது, மனதில் திராணி இல்லாமல் உள்ளே நுழைந்தார்.
“சேது வீர மரணம் அடைஞ்சிட்டான் ,” என்று கணவரை கண்டதும் குளறி அழுத தங்கம்மாவை கண்டதும், அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு தங்கம்மா கணவர் பசுபதி நெஞ்சை பிடித்துக்கொண்டு விழுந்தவர் தான். எழவே இல்லை. செத்த வீடு நடத்த தேவையில்லை, அந்த உடலை அப்புறப்படுத்த வைத்து கொண்டு போக ஒரு பெட்டி , சுடலைக்கு போக செலவுக்கே அவள் பிச்சை எடுக்காத குறையாக படாத பாடு பட்டு கணவரின் ஈமக்கிரிகளை முடித்தாள் தங்கம்மா.
அதன் பின் கூலி வேலைக்கு முதன் முறையாக போனாள் தங்கம்மா கஷ்டம் என்றாலும் கொஞ்சம் உழைக்க முடியும் இந்த பிள்ளைகள் வயிற்று பசி ஆற்றினால் போதும் , என்ற நிலையில் சில இடங்களில் சமையல் வேலை, கூப்பன் அரிசி இப்படி வாழ்வை கடத்திக்கொண்டு வந்த போது தான், வீட்டு சொந்தக்காரர் வந்து இந்த இடத்தை விற்க போறம் வீட்டை காலி பண்ணுங்கள் என்ற போது தான் மறுபடி இந்த போராட்டத்தை எப்படி சமாளிப்பது என்று விறைத்து போய் இருந்தாள் தங்கம்மா.
அது பலரின் பார்வையில் வீடு அல்ல , ஒரு மாட்டுக் கொட்டில் . ஆனால் தங்கமாவை பொறுத்தவரை வசந்த மாளிகை. எங்கே சுத்தினாலும், அந்த ஓட்டை பாயில் வெறும் வயிற்றோடு படுத்து இருந்தாலும் யாரின் தொந்தரவும் இருந்தது இல்லை. மழை காலங்களில் இரவுகளில் படுக்காமல் இருந்து அலுமினிய பாத்திரங்களை கூரையால் ஒழுங்கும் இடங்களில் வைப்பதுதான் தங்கம்மா , மகள்களின் வேலை. தவிர அந்த இடம் சொர்க்கபுரி போல தான் இருந்தது. இந்த நிலைமையில். வீட்டை விட்டு எங்கே போவார்கள் எங்கே ஒதுங்குவார்கள்? தங்கம்மா வீட்டுக்காரர் உடன் எவ்வளவோ மண்டாடி பார்த்து விட்டாள் .
“பாவத்துக்கு அஞ்சி சும்மா இருக்க விட்டது போதும், காணியை விற்று நாங்கள் சாகிறதுக்கு முதல் எங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வழி செய்து விட்டு போறதுக்கு தான். எங்கேயாவது ஒரு இடத்தை தேடி பார்த்து போறது , யாழ்ப்பாண பக்கம் போனால் நல்லது என்று நினைக்கிறன் “ என்று அந்த வீட்டுக்காரம்மா உபதேசம் வேற பேசி விட்டு போய் விட்டாள் . இதற்கு மேலே பேச திராணி இல்லாமல் எங்கே போவது என்று யோசித்து யோசித்து களைத்து போனாள் தங்கம்மா. பசி வயிற்றை கிள்ள மூளை சிந்திக்கும் திறனை இழந்து இருந்தது.
பக்கத்தில் வயிற்றில் ஈர சீலை போடாத குறையாக வயிற்றை பிடித்த படி தூங்கும் பிள்ளைகளை பார்க்க கண்கள் பொங்கிக் கொண்டு வந்தன .
“ போகலாம் அம்மா “ என்றபடி தங்கையை கையில் பிடித்தபடி மகள் தனம் நின்றாள் .” எங்கேயடி “என்று பரிதாபக பார்த்த தாயை “எங்கே என்றாலும் போகலாம், அதுக்காக இங்கே இருக்க முடியுமா” என்ற படி கையில் கிடந்த யாரோ தூக்கி போட்டு போன பையை கழுத்தில் மாட்டிக்கொண்டு , தங்கை கையில் ஒரு பிளாஸ்டிக் பையை கொடுத்து “இதை கொண்டு வா “ என்ற படி நடக்க தொடங்கினார்கள்.
மனதினுள் தாய், மகள்கள் மனதின் உள்ளே ஆறாத துயரம், இந்த கிராமத்தை விட்டு போகிறோம் இனி பார்ப்போமா , தங்கம்மாவுக்கு, மகன், கணவன் நினைவு வந்து போனது. தனம் மனதில் பள்ளிக்கூடம் போன காலம் எல்லாம் நினைவில் வந்து போனது. இனி இந்த கிராமத்தை பார்க்க என்று வர போவதில்லை, ஆனாலும் சொல்லொண்ணா துயர் நெஞ்சை அடைத்தது. இங்கு உள்ள ஒவ்வொரு சந்தி பொந்து எல்லாம், பூந்து விளையாடிய இடம், இனி எங்கே போவது என்று தெரியாமல் வெறும் காலோடு அம்மாவும் , பலமுறை தைத்து அறுந்து போன பாட்டா செருப்பை கடைசியாக ஒரு முறை பின்னை குத்தி போட்டுகொண்டு நடந்தாள் தனம் . தங்கை தன் காலை விட கொஞ்சம் ஒரு பழைய செருப்பை போட்டு கொண்டு இழுத்து இழுத்து நடப்பதை வேதனையோடு பார்த்த படி நடந்தாள் .
சந்தியை கடந்து வந்து விட்டார்கள், லேசாக தாகம் எடுக்க தங்கம்மா தண்ணீரை குடித்து விட்டு “கொஞ்சம் தண்ணீரை நிரப்பிக்கொண்டு நடப்போம் தனம்” என்றபடி கோயிலடியில் இருந்த குழாயடியில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு வந்தாள் தனம் . வீதியில் யார் முகத்தையும் பார்க்க பிடிக்கவில்லை, பசி மட்டுமே மனசு யோசித்து கொண்டு இருந்தது. எதாவது கோயில்களில் அன்னதானம் நடக்கிறதா என்று எண்ணியபடி தங்கம்மா நடந்தாள் .
களைப்போடு போய் அங்கே உள்ள சத்திரத்தில் வந்து அமர்ந்தார்கள் , ஆங்காங்கே படுத்து இருந்தவர்கள் லேசாக தலையை தூக்கி பார்த்தார்கள், எதோ வராத விருந்தினர் வந்தது போல. சுவரோடு சாய்ந்து இருந்த ஒரு வயதான மூதாட்டி , கொஞ்சம் இப்படியே இருங்க. இன்றைக்கு ஒரு தர்மப்பிரபு மத்தியானம் சாப்பாடு தருவதாக கேள்வி. தங்கம்மா, தனம் மனதில் லேசாக நிம்மதி பிறந்தது , பக்கத்தில் இருக்கும், கனகாவை பார்க்க , அவள் கருத்து மெலிந்து பார்க்க விழுந்து விடுவாள் போல இருந்தது. கொஞ்சம் என்றாலும் சாப்பிட்டால் தான் உடம்பு தேறும்.
இரவு எங்கே படுக்கை என்று மனசு அங்கலாய்த்தது . எங்கே நடக்கிறோம் என்று தெரியாமல் நேராக யாழ்ப்பாணம் நோக்கி நடந்து கொண்டு இருந்தார்கள், மொட்டை அடிக்க பட்ட பனை மரங்கள், தகர்த்து விடப்பட்ட கட்டிடங்கள் எல்லாம் கடந்து கால் போன போக்கில் போய் கொண்டு இருந்தார்கள் . லேசாக இருட்டு பட தொடங்கியது. பாதி நிலையில் உடைந்து நொறுங்கிய அந்த வீடு தனம் கண்ணில் பட்டது. “ அம்மா இன்றிரவு இங்கு தங்கலாம் நாளைக்கு போயிடலாம் “என்ற தனம் பதிலை எதிர்பார்க்காமல் அங்கே நுழைந்தாள் , ஒரு உடம்பு ஒட்டிய குட்டை பிடித்த நாய் படுத்து இருந்தது, இவர்களை கண்டு விட்டு எங்களுக்கு போட்டியா என்பது போல எழுப்பி மெதுவாக விலகி கொஞ்சம் தள்ளி படுத்தது .
அதில் கிடந்த பாதி உடைந்த உடையாமல் சீமென்ட் கட்டில் அப்படியே குந்தி இருந்து விட்டு சாய்ந்து படுத்தார்கள். “பயமாக இருக்கு அம்மா “ என்றாள் கனகா . “இந்த மனிதர்கள் இல்லாத இடம் ஒன்று பயமில்லை, மிருகங்கள் வந்தால் சமாளிக்கலாம். என்ற படி தங்கையை தடவினால் தனம் .
அப்படி தங்கையை சாந்த படுத்தினாலே தவிர தனத்தால் நிம்மதியாக உறங்க முடியவில்லை, வீதியால் நடந்த போவோர் குடித்து விட்டு கெட்ட வார்த்தைகளால் திட்டிய படியே நடக்கும் அவர்கள் , தவறியும் அந்த மனிதர்கள் இங்கே வந்து விட கூடாதே என்ற பயம். மறுபக்கம் நுளம்பு , இரத்தமே இல்லாமல் சுண்டிப்போன உடம்பில் அப்படி என்ன சுவையை கண்டதோ, விடாமல் வந்து பதம் பார்த்தது.
தங்கம்மாவுக்கோ, தனத்துக்கோ பேசுவதற்கு ஒன்றுமே இருக்கவில்லை, தேடல் மட்டுமே கண்ணில் இருந்தது, அது பசியை அடைக்க வேண்டும், கை பிடியில் இருக்கும் தங்கை கனகாவை பார்க்கும் ஒவ்வொரு கணமும் மனசு என்னவோ செய்தது.
எந்த ஒரு பிடிப்பு இல்லாமல் விரிந்து கிடக்கும் இந்த பூமியில் படுத்து எழுப்ப, வயிற்று பசிக்கு உணவு , எங்கே கிடைக்கும் என்ற போராட்டம் கண்ணில். கருத்து மெலிந்து எலும்புக்கூடாக ,தேகத்தின் நிறத்தை போலவே தங்கம்மாவின் சேலையும் நிறம் மாறி ஆங்காங்கே நெருப்பு சுட்ட மாதிரி பொத்தல் பொத்தலாக இருந்தது. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து இன்று வீதிக்கு வந்து விட்ட நிலைமையில் கூட கை நீட்ட கூச்சம் தடுத்தது . மானம் கெட்ட பசி அதையும் செய்து விடு என்று தூண்டியது. முதலில் எங்கேயாவது ஒரு வேலையை தேடி விட வேண்டும் தனம் எண்ணிக்கொண்டாள். பிறகு தங்குமிட வசதி , அதுவரை ஏதாவது கோயில்,. சத்திரங்களில் சமாளிக்கலாம், பெண்ணாய் பிறந்ததினால் கோயில் வாசலில் கூட சில நாட்கள் படுத்துறங்க விடாத சில சாத்திர சம்பிரதாயங்கள்.
நகரம் மிக மிக பிசியாக இருந்தது, வெயில் கொதித்தது, இப்போது எல்லோர் காலும் செருப்பு அற்ற கால்களாக இருந்தது, வழியில் செருப்பு அறுந்து கொடுத்த அலுப்பில் தூக்கி எறிந்து விட்டு வந்து விட்டார்கள், அப்படி இந்த பசியை மட்டும் தூக்கிய ஏறிய முடிந்தால் எப்படி நல்லா இருக்கும்.
நிழலுக்காக ஒதுக்கி நின்ற இடத்தில் அப்படியே சரிந்து விழுந்த கனகாவை , எழுப்ப கூட கையில் தண்ணீர் இல்லாமல் பக்கத்தில் உள்ள கடையில் ஓடிப்போய் தண்ணீர் வாங்கி தெளித்த போது தான் கவனித்தாள் அவள் தேகம் அனலாக கொதித்தது. விசாரித்து விசாரித்து பெரிய ஆஸ்பத்திரியை கண்டு பிடித்து ஒரு மாதிரி பார்த்த வைத்தியர் மருந்து சீட்டை எழுதி மருந்தை வாங்கி உடனே கொடுக்க சொன்னார் . கையில் சீட்டை திருப்பி மேலும் கீழுமாக பார்த்த தனம் என்ன செய்ய என்று திகைத்து நிற்க , தங்கம்மா அந்த சீட்டை பறித்துக்கொண்டு போய் ஒரு பார்மசியில் நிலைமை சொல்லி மருந்துக்கு மண்டாடி கொண்டு இருந்தாள் . இங்கே எதுவும் இலவசமாக எதுவும் கிடையாது, திட்டும் உதையும் தவிர என்பதை தங்கம்மா என்ற தாய் மனம் புரிந்து கொள்ள மறுத்தாலும், தனம் புரிந்து கொண்டாள் . தங்கம்மா தேம்பி தேம்பி பக்கத்தில் சுட்டெரிக்கும் சீமெந்து கட்டில் படுத்து இருக்கும் மகளை பார்த்து அழுதாள்.
“அம்மா கனகாவை பார்த்துக்கொள்ளுங்கோ “ என்ற படி ஒவ்வொரு கடையாக மருந்து சீட்டுடன் ஏறி இறங்கினாள் தனம் . சனநெருக்கடிக்குள் சங்கட பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அந்த சங்கடம் மறைய தொடங்க யாரவது உதவுவார்களா என்று எல்லோரிடமும் வெளிப்படையாக பிச்சையாக கேட்க தொடங்கினாள் . வாழ்வின் கஷ்டம் மனிதரை எந்த இடத்துக்கும் கொண்டு வந்து விடும், அதற்கு மான அவமானங்கள் தெரியாது. பலரோடு போராடி முடிவில் , முடிவாக பலநேரங்களின் பின் மருந்தோடு வந்தாள் தனம் .
இரண்டு வகை குளிசை , கனகா வாயில் போட்டு தண்ணீரை குடிக்க கொடுத்தாள் தனம் . தங்கம்மா மகளை ஆச்சரியமாக பார்த்தாள் , “நல்லவர்களும் இந்த பூமியில் இருக்கிறார்கள்”. தனம் இயலாமையால் சிரித்தாள் , நல்லவர்கள் யாருமே இல்லை அம்மா , இலவசமாக எதுவுமே கிடையாது. எதாவது ஒன்றை எடுத்துக்கொண்டு தான் கொடுப்பார்கள், என்றவள் தெருவை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தாள் . தங்கம்மா மகளை பாதி புரிந்தும் புரியதுமாக பார்த்தாள் . “ என் கற்பை கொடுத்து தான் இந்த மருந்து சீட்டுக்கு விலை, மிச்ச பணம் இங்கே இருக்கு “ என்று தாயின் முன்னால் சில ரூபா தாள்களையும் சில்லறைகளை கொட்டினாள், எதுக்குமே உதவாமல் இருக்கிற இந்த கற்பு எதற்கு அம்மா, அப்படி இருந்து என்ன எனக்கு சிலையா வைக்க போகிறார்கள். வைத்தும் என்ன வைக்கவில்லை என்றால் என்ன.” என்ற படி எழுது நடக்கும் மகளை தங்கம்மா அதிர்ந்து போய் பார்த்துக்கொண்டு இருந்தாள் .
May be an image of 10 people, motorcycle, street, tree and road
See insights
You, Shanmugarasa Vadivelu and 1 other

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்