கஞ்சி
அந்த காலத்தில் ரைஸ் குக்கர் எல்லாம் வரவில்லை. குத்தரிச்சியை உலையில் போட்டு கஞ்சி வடித்து சமையல் செய்வது தான் வழக்கம் . கஞ்சி வடிக்க அம்மா எங்களை விடுவதில்லை. கையில் கஞ்சியை ஊற்றிக் கொள்வோம் என்ற பயம், எங்களை விட அம்மாவுக்கு தான் அதிகம்.
குத்ததரிச்சி கஞ்சி மிக சத்தானது என்று அம்மா சொல்லுவா உப்பு போட்டு தேங்காய் பால் விட்டு குடிக்கலாம் என்று , ஆனால் அதில் இருக்கும் அந்த கசப்பு ஏனோ எனக்கு பிடிப்பது இல்லை. அம்மா உலை வைத்து , 11 காலை மணிக்கு கஞ்சி வடித்து விடுவா.
ஊரில் கொஞ்ச காலமாக மாவிடிக்க மல்லிகா அக்கா தான் வருவா , கிழமைக்கு ஒருக்கா அல்லது இரண்டு கிழமைக்கு ஒருக்கா. வரும் போது தன் இரண்டு வயது குழந்தையும் தூக்கி வந்து முன்னுக்கு ஒரு பலகையை போட்டு இருத்தி வைப்பா மல்லிகா அக்கா. அந்த குழந்தையும் சமத்தா அம்மா பேச்சு கேட்டு இருந்த படியே விளையாடும்.
மல்லிகா அக்கா சமீபத்தில் தான் வீட்டுக்கு மாவிடிக்க வருகிறார். அவர் திருமணம் செய்து கணவரோடு கிளிநொச்சியில் வசித்து வந்து இருக்கிறா. சமீபத்தில் தான் கணவரோடு எதோ பிரச்சனையில் கணவர் அடிக்க குழந்தையையும் தூக்கிக் கொண்டு தாய் வீடு வந்து இருக்கிறார். தாய் வீடும் அப்படி ஒன்றும் வசதியானவர்கள் இல்லை , ஆனாலும் பெண்களுக்கு அம்மா வீட்டை விட்டால் எங்கே போக முடியும்.
அங்கேயும் வறுமை தாண்டவமாடியது மல்லிகா அக்கா வீடு வீடாக போய் மா இடித்து உழைக்க தொடங்கி இருக்கிறார்..
அப்படி வந்து சேர்ந்தவர் தான் மல்லிகா அக்காவும் குழந்தையும். அன்றொரு நாள் அம்மா வடித்த சுடு கஞ்சியை வெளியில் ஊத்தக் அரிக்கன் சட்டியில் கொண்டு போக, மல்லிகா அக்கா " அம்மா கஞ்சியை வெளியில் ஊற்ற வேண்டாம் , நான் பிள்ளைக்கு கொடுப்பன் " என்றா .
" கறி அடுப்பில , இப்ப சமையல் முடிஞ்சிடும் , நீ சாப்பாடு பிள்ளைக்கு கொடுக்கலாம் என்று அம்மா சொல்ல,
"ஓமோம் , சோறு பிறகு கொடுக்கலாம் , இந்த கஞ்சி அவனுக்கு விருப்பம் , தாங்கோ "என்று தன் குழந்தைக்கு அம்மாவிடம் ஒரு கிண்ணத்தில் வாங்கி கஞ்சியை கொடுத்தார்.
இந்த சம்பவத்தின் பின் எங்கு மா இடிக்க போனாலும் கஞ்சியை அந்த நேரத்துக்கு வந்து எடுப்பது வழக்கம், அத்தோடு குழந்தைக்கு கொஞ்ச உணவும் எடுத்து போவார்.
எங்கள் அண்ணன் சிங்கப்பூரில் இருந்து ஊர் திரும்பினார், திரும்பும் போது எங்கள் வீட்டிற்கு என்று ஒரு ரைஸ் குக்கர் வாங்கி வந்திருந்தார். இனிமேல் கஞ்சி வடிக்கும் வேலை இல்லை, நாங்கள் கையில் கஞ்சி ஊத்திக் கொள்ளும் பயம் அம்மாவுக்கு இல்லை என்று எங்களுக்கு மகிழ்ச்சி.
ரைஸ் குக்கர் வந்தும் அம்மா அரிசி போட்டு வடிப்பது மட்டும் நிறுத்தவில்லை. நாங்கள் எல்லோரும் கூடியிருந்து ரைஸ் குக்கரில் எப்படி அரிசியை வேக வைப்பது என்று அம்மாவுக்கு பாடம் எடுத்தோம். ஆனால் அம்மாவுக்கு அதை பாவிக்க தெரியவில்லை என்று எங்களுக்கு புரிந்தது. நாங்கள் வேலை படிப்பு என்ற பிஸியாக போக இந்த ரைஸ் குக்கர் பற்றி மறந்து போனோம்.
ஏழு எட்டு மாதம் ஒடியிருக்கும், அன்று அம்மா எங்களுக்கு சுடு சோறு சாப்பிட போடும் போது தான் கவனித்தோம் ரைஸ் குக்கரில் சோறு சமைத்து இருக்கிறா. " அம்மா உங்களுக்கு ரைஸ் குக்கரில் சோறு சமைக்க தெரியுமா என்று ஆச்சரியமாக கேட்டபோது, ஓம் மல்லிகா குழந்தையோடு கிளிநொச்சிக்கு போய்ட்டா என்று சொன்னார்.
கருத்துகள்
கருத்துரையிடுக